140 கோடி இந்தியர்களும் ஆவலுடன் எதிர்நோக்கும் அந்த நாள் நெருங்கிவிட்டது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து சென்ற விக்ரம் லேண்டர் தயாராகி வருகிறது. நிலவில் தரையிறங்க பாதுகாப்பான இடத்தைத் தேடி வரும் விக்ரம் லேண்டர், அங்கே ஏற்கனவே சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது?
சந்திரயான்-3 திட்டம் எந்த கட்டத்தில் உள்ளது?
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து சென்ற விக்ரம் லேண்டர் 25 கிமீ x 134 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் நிலாவை தற்போது சுற்றிக் கொண்டிருக்கிறது என ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்ரோ அறிவித்தது.
விக்ரம் லேண்டர் நிலாவில் பாதுகாப்பாகத் இறங்குவதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பான புதிய புகைப்படங்களையும் அவ்வப்போது விக்ரம் லேண்டர் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. அனுப்பிக் கொண்டிருக்கிறது.
தற்போது நிலாவில் பாறைகள், கற்கள் போன்றவற்றை தவிர்த்து, பாதுகாப்பான தரையிறங்கும் இடத்தைத் தேர்வு செய்யும் சிக்னல்களை பூமியில் இருந்து விஞ்ஞானிகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பணியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது. Lander Hazard Detection and Avoidance Camera (LHDAC) எனப்படும் ஆபத்தான இடத்தைத் தவிர்க்க உதவும் கேமராவால் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
“இந்திய நேரப்படி புதன்கிழமை மாலை 6:04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலாவின் தரையைத் மென்மையாகத் தொட இருக்கிறது. ஆபத்தைக் கண்டறிதல் மற்றும் தவிர்ப்பு கேமராவின் துணையுடன் தரையிறங்கும் பகுதியை படங்களாக எடுத்து அனுப்புகிறது. தொடவிருக்கிறது, தரையிறங்கும் பகுதியை வரைபடமாக்கி படங்களை எடுத்து வருகிறது.” என்று இஸ்ரோ கூறியுள்ளது.
“இந்த கேமரா மூலம் அனுப்பப்படும் கருப்பு-வெள்ளை படங்கள் “பாறைகள் அல்லது ஆழமான அகழிகள் இல்லாத் பாதுகாப்பான தரையிறங்கும் பகுதியைக் கண்டறிய” உதவும் என்று இஸ்ரோ மேலும் கூறியிருக்கிறது.
சந்திரயான்-2 ஆர்பிட்டருடன் விக்ரம் லேண்டர் தொடர்பு
நிலவை 5 கிமீ x 134 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் விக்ரம் லேண்டர், அங்கே ஏற்கனவே சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சந்திரயான்-2 விண்கலம் 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்பட்டது. அதில், லேண்டரை தரையிறக்கும் போது கடைசி நேரத்தில் ஏற்பட்ட கோளாறால் அது நிலவில் மோதி நொறுங்கிவிட்டது. அதைத் தவிர சந்திரயான்-2 விண்கலத்தின் மற்ற கருவிகள் அனைத்துமே திட்டமிட்டப்படி தங்களது பணியைத் தொடர்ந்தன. அதில் முக்கியமானது ஆர்பிட்டர்.
சந்திரயான்-2 ஆர்பிட்டரைக் கொண்டு, அதிலிருந்த கருவிகள் மூலம் இஸ்ரோ கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வுகளைத் தொடர்ந்தே வந்தது. அதில் உள்ள தொலையுணர் கருவிகள், ப்ளாஸ்மா அளவீட்டுக் கருவிகள் போன்றவற்றைக் கொண்டு பூமியில் உள்ள கட்டளை மையத்திற்கு அது தரவுகளை அனுப்பிய வண்ணமே இருந்தது.
சந்திரயான்-2 ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்ததால், சந்திரயான்-3 விண்கலத்தில் ஆர்பிட்டரையே இஸ்ரோ அனுப்பவில்லை. இதன் மூலம் சந்திரயான்-3 திட்டத்தில் பல கோடி ரூபாயை இஸ்ரோ மிச்சப்படுத்தியது.
தகவல் தொடர்பு எப்படி சாத்தியமானது?
சந்திரயான்-2 ஆர்பிட்டருடன் சக்திவாய்ந்த ட்ரான்ஸ்மீட்டரும், ரிசீவரும் பொருத்தப்பட்டிருக்கும். தொலையுணர் கருவிகள், ப்ளாஸ்மா அளவீட்டுக் கருவிகள் தரும் தரவுகளை அவற்றின் மூலமே ஆர்பிட்டர் இஸ்ரோவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
அதேபோல், விக்ரம் லேண்டரையும் பூமியில் இருந்து தொடர்பு கொள்ளவும், கட்டுப்படுத்தவும் அதில் தகவல் தொடர்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆர்பிட்டர், லேண்டர் ஆகிய இரண்டிலும் உள்ள தகவல் தொடர்புக் கருவிகளில் உள்ள வேறுபாடு என்னவென்றால், லேண்டரில் உள்ள தகவல் தொடர்பு என்பது பலவீனமாக இருக்கும். அதன் மூலம் வெறுமனே பூமியில் இருந்து வரும் கட்டளைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை அங்கிருந்து பூமிக்கு அனுப்ப முடியாது.
ஆனால், ஆர்பிட்டரில்தான் சக்தி வாய்ந்த ஆன்டனா உள்ளிட்ட தகவல் தொடரபு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் அதன் மூலமே சந்திரயான் விண்கலம் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பூமிக்கு அனுப்பும்.
தற்போது, சந்திரயான்-2 ஆர்பிட்டர், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகிய இரண்டுமே இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவற்றை ஒன்றோடோன்று தகவல் தொடர்பு கொள்ளச் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
“பூமியில் இரு தகவல் தொடர்பு கோபுரங்களுக்கு இடையே எப்படி தகவல் தொடர்பை ஏற்படுத்துகிறோமோ அதே போன்றதுதான் இதுவும். சந்திரயான்-2 ஆர்பிட்டரும், விக்ரம் லேண்டரும் ரேடியோ அலைகள் மூலம் தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும். இருவழி தகவல் தொடர்பு உருவாகி விட்டதை இஸ்ரோ உறுதிப்படுத்தியிருக்கிறது. இனிமேல், சந்திரயான்-3 விண்கலத்துக்கும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு பாலமாக சந்திரயான்-2 ஆர்பிட்டர் செயல்படும். சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற தரவுகளை அது சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலமாக பூமிக்கு அனுப்பி வைக்கும். விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் பிரக்ஞான் ரோவரும் 14 நாட்கள் அங்கிருந்தபடியே ஆய்வு செய்து தகவல்களை அனுப்பி வைக்கும். ஆனால், ஆர்பிட்டரோ இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும். ” என்று அவர் விளக்கம் அளித்தார்.
நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவது எப்போது?
தனது வயிற்றில் பிரக்யான் என்ற உலவு ஊர்தியை சுமந்து சென்றிருக்கும் விக்ரம் லேண்டர் வரும் 23-ஆம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு நிலாவில் தரையிறங்க உள்ளது. சந்திரயான்-3 வெற்றி பெற்றால், சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெறும். அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைக்கும்.
விக்ரம் லேண்டர் நிலாவில் தரையிறங்குவது எப்படி?
இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள். இதற்காக, தரையிறங்கி கலத்தின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, தரையிறங்கி கலத்தை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும்.
இறுதிக்கட்டமாக, தரையிறங்கி கலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலாவின் தரையில் இயக்கவேண்டும். அதற்கு, தரையிறங்கி கலம் நிலவின் தரையில் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும்.
அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு இறங்கி, நிலவின் தரையில் தடம் பதிக்கும் ஊர்திக்கலம் தனது வேலையைத் தொடங்கும். விக்ரம் லேண்டரும் அதனுள் இருக்கும் பிரக்யான் ரோவரும் 14 நாள்கள் அங்கிருந்தபடியே ஆய்வுகளைச் செய்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும்.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவது சவால் ஏன்?
நிலவில் மனிதர்களையே தரையிறக்கி ஆய்வு செய்து விட்ட அமெரிக்காவோ, விண்கலங்களை இறக்கி ஆய்வு செய்துவிட்ட ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகளோ செய்யாத ஒரு சாதனையைச் செய்ய இந்தியா தயாராகி வருகிறது. ஆம். அந்த நாடுகள் அனைத்துமே, நிலவின் மத்திய ரேகைப் பகுதியில் தங்களது விண்வெளி வீரர்களையும், விண்கலங்களையும் தரையிறக்கியுள்ளன.
ஒப்பீட்டளவில் நிலவின் மத்திய ரேகைப் பகுதியில் தரையிறங்குவது எளிது. அங்கே சூரிய ஒளி கிடைக்கும் என்பதால் விண்கலங்களுக்குத் தேவையான சக்தியைப் பெற முடியும். அதேநேரத்தில், பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாத நிலவின் இருண்ட பக்கமாக வர்ணிக்கப்படும் தென் துருவத்தில் விண்கலங்களை தரையிறக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல.
அதனை சாதித்துக் காட்டத்தான் இஸ்ரோ தற்போது காத்திருக்கிறது. அரசியல், ராணுவத்தைப் போல விண்வெளி ஆராய்ச்சியிலும் சோவியத் ஒன்றியத்தின் வாரிசாக கருதப்படும் ரஷ்யா, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலாவுக்கு அனுப்பிய லூனா-25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறால் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கிவிட்டது. அந்த விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில்தான் தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது.
நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெறும் முனைப்பில் இந்தியா இருக்கிறது. அதற்காக சந்திரயான்-3 விண்கலம் தயாராகி வருகிறது.
நிலவுக்கு மனிதர்களே சென்ற பிறகு இந்த ஆய்வு ஏன்?
தென் துருவத்தில் உறைந்த மண்ணில் நீரின் தடயங்களை சந்திரயான்-3 கண்டறிந்தால், அது எதிர்கால சோதனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிலவில் உள்ள தண்ணீரைக் கண்டறிந்தால், அதில் இருந்து ஆக்ஸிஜனையும் உருவாக்கலாம். அங்கு மனிதர்கள் வசிக்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்கு இது பயனுள்ளதாகவும் இருக்கும்.
அதுமட்டுமின்றி, ஆக்சிஜனை விண்வெளிப் பரிசோதனைகள் மற்றும் சந்திரனில் நடக்கும் பிற சோதனைகளுக்கு உந்துசக்தியாகவும் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்