இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ கடந்த ஜூலை 14ம் தேதி சந்திராயன் – 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்றுள்ள விக்ரம் லேண்டர் நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அந்த தருணத்தை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
சந்திரயான்-3 திட்டத்தின் ஒரு பகுதியாக விக்ரம் லேண்டரும், பிரக்ஞான் ரோவரும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதை பரிசோதிக்க இஸ்ரோவுக்கு, அதேபோன்ற மண் மாதிரி தேவைப்பட்டது.
அந்த மண் மாதிரி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில், அதுவும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. இது குறித்து தெரிந்துகொள்ள கொஞ்சம் பின்னோக்கி செல்ல வேண்டும்.
1950 ஆண்டுவாக்கில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை பகுதியில் அனார்தசைட் வகையான பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக்கும், சந்திராயன் ஆய்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அனார்தசைட் பாறைகள் நிலவு உருவானபோதே உருவான பாறைகள். இங்கு கனிமங்கள் இருக்கும் என்ற கோணத்தில் அப்போது ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.
இந்த நிலையில் கடந்த 1970 களில் அப்போலோ செலுத்தப்பட்ட பிறகே நிலவில் அனார்தசைட் மற்றும் பேசால்ட் மண் வகை பாறைகள் உள்ளது என தெரியவந்தது. இஸ்ரோ சந்திராயன் – 2 வை அனுப்ப திட்டமிட்ட போது அமெரிக்காவில் இருந்து அனார்த்சைட் மண் மாதிரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. இந்த நிலையில் தான் இதன் திட்ட இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மூலம் இந்தியாவிற்குள்ளேயே நிலவின் மாதிரி மண்ணை தேடலாம் என தெரிவித்தார்.
இதற்காக மும்பை ஐஐடியில் பணியாற்றி வந்த புவி தகவல் கோளியல் மைய ஆராய்ச்சியாளர் அன்பழகன் என்பவரை இஸ்ரோ நாடியது. அப்போது இவரின் தலைமையிலான குழு மற்றும் இஸ்ரோ மண் சார்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கடந்த 2004 ஆம் ஆண்டு சித்தம்பூண்டி கிராமத்தில் உள்ள மண்ணுடன், நிலவு மண் 99 சதவீதம் ஒத்துப்போகிறது என கண்டறிந்தனர். இதை தொடர்ந்து கடந்த 2012 – 13 ஆம் ஆண்டில் சித்தம்பூண்டியில் இருந்து எடுக்கப்பட்ட அனார்தசைட் பாறைகளை சேலத்தில் உள்ள ஒரு குவாரியில் மண்ணாக மாற்றி 50 டன் அளவிற்கு இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தனர். அந்த நிலவு மாதிரி மண்ணில் தான் சந்திராயன் – 2 விண்கலத்தை இறக்கி சோதனை பார்த்து பிறகு நிலவை நோக்கி அனுப்பினர்.
தற்போது சந்திராயன் – 3 விண்கலத்தை அந்த மாதிரி மண்ணில் பலமுறை சோதனை செய்த பிறகே அனுப்பி வைத்துள்ளனர். நிலவு மாதிரி மண்ணை சேகரித்து கொடுத்த ஆராய்ச்சியாளர் அன்பழகன் சேலம் பெரியார் பல்கலைக்கழக புவி தகவல் மைய இயக்குநராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து பிபிசி தமிழுக்காக அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.
“நிலவின் மேற்பரப்பில் இரண்டு வகையான பாறைகள் உள்ளன. அவை அனார்தசைட் மற்றும் பேசால்ட் வகை பாறைகளாகும். தென்புறம் தரையிறங்கும் பகுதியில் அனார்த்சைட் பாறைகள் உள்ளன. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை பகுதியில் 1950, 55 ஆண்டுகளில் சுப்பிரமணியம் போன்ற புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யும் போது இந்த பாறைகள் அனார்த்சைட் பாறைகள் என கண்டறிந்துள்ளனர். இந்தப் பாறைகள் பூமி தோன்றிய போதே உருவானவை. இவை எப்படி உருவானது என்பன போன்ற ஆராய்ச்சிகள் அப்போது நடைபெற்றது.” என்றார் அவர்.
“1970 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அப்பல்லோ மிஷன் மூலமாகத்தான் நிலவில் அனார்த்சைட், பேசால்ட் வகையான பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது தான் நிலவில் உள்ள அனார்த் சைட் பாறைகள் உலகம் முழுவதும் உள்ள பாறைகளோடு ஒத்துப் போகின்றன என்றனர். ” என்று மேலும் அவர் தெரிவித்தார்.
“2004ல் சந்திராயன் 1 பணி துவங்கியது. அப்போது, ஐஐடி., பாம்பேவில் இருந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சித்தம்பூண்டியில் இருந்து எடுக்கப்பட்ட அனார்த்சைட் மண் ஆராய்ச்சிகளில் ஈடுபாட்டில் கவனம் செலுத்தி வந்தோம். அந்த ஆய்வின் போது, சித்தம்பூண்டியில் இருந்து எடுக்கப்பட்ட அனார்த்சைட்டின் வேதியல் மற்றும் கணித பண்புகள் நிலவின் தென் பகுதியில் உள்ள அனார்த்சைட் பாறைகளோடு 99 சதவீதம் ஒத்துப்போனது தெரியவந்தது. “
“2019-ம் ஆண்டு சந்திரயான் – 2 க்கு பின்னர் நிலவு போன்று ஒரு தரையை உருவாக்கி அதில் லேண்டெர் மற்றும் ரோவர் ஆகியவற்றை இஸ்ரோ ஆய்வு செய்தது. அப்போது இந்த மண் வகைகள் வேண்டும் என கூறினர். ஏற்கனவே நாங்கள் செய்த ஆராய்ச்சியின் படி அதனை தருகிறோம் என முடிவு செய்து, அனுப்பி வைத்தோம். இதனை இஸ்ரோவில் பல கட்டங்களாக ஆய்வு செய்து பயன்படுத்தியுள்ளனர்” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்