ஃபிஃபா மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் அந்த அணி, இங்கிலாந்தை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை ஓல்கா கார்மோனா அடித்த கோலே அந்த அணியின் வெற்றிக்கான கோலாக அமைந்தது.
இந்த ஆட்டத்தை மைதானத்தில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் தொலைக்காட்சிகள், பெரிய திரைகள் மூலம் நேரலையில் போட்டியை கண்டு ரசித்தனர்.
மகுடத்திற்காக ஸ்பெயின்-இங்கிலாந்து பலப்பரீட்சை
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும், 6வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின.
இந்த தொடரில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்தித்திராத இங்கிலாந்து அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு விளையாடியது.
மறுபுறம், கடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பை காலியிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்து முதன்முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஸ்பெயின் வீராங்கனைகள் விளையாடினர்.
இரு அணிகளுமே இதுவரை கோப்பையை வென்றது இல்லை என்பதால் முதன்முறையாக கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.
போட்டித் தொடங்கிய 29 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை ஓல்கா கார்மோனா கோல் அடிக்க 1-0 என அந்த அணி முன்னிலை பெற்றது. அதற்குப் பதில் கோல் திருப்ப இங்கிலாந்து அணி கடுமையாக போராடியது. ஆனால், ஸ்பெயின் அணியின் தற்காப்பு மிகச்சிறப்பாக இருந்ததால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து அணி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வர தீவிரமாக முயற்சித்தனர். அதற்காக தாக்குதல் பாணி ஆட்டத்தை கையில் எடுத்தனர். ஆனாலும் கூட ஸ்பெயின் அணியின் தற்காப்பை மீறி அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அதேநேரம், ஸ்பெயின் அணியும் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கவில்லை.
ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளுமே மேற்கொண்டு கோல் எதுவும் போடாததால், முடிவில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதன் முறையாக உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது.
ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை ஓல்கா கார்மோனா அடித்த கோலே அந்த அணியின் வெற்றிக்கான கோலாக அமைந்துவிட்டது.
நிறைவேறாமல் போன 56 ஆண்டுகால கனவு
இங்கிலாந்து ஆடவர் அணி கடைசியாக கடந்த 1966ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றிருந்தது. அதன்பின்னர், இதுவரை இங்கிலாந்தின் ஆடவர், மகளிர் கால்பந்து அணிகள் எந்தவொரு சர்வதேச தொடரையும் வென்றது இல்லை.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முதன்முறையான இங்கிலாந்து அணி முன்னேறியதோடு, இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்கவில்லை என்பதால் நிச்சயம் கோப்பையை கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடரில் அபாரமாக செயல்பட்டு ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அந்த அணி ஸ்பெயினிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளது.
கோப்பையை கைப்பற்றிய 5வது நாடு
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 32 ஆண்டு கால வரலாற்றில் அதிகப்பட்சமாக அமெரிக்கா 4 முறையும் ஜெர்மனி 2 முறையும் நார்வே மற்றும் ஜப்பான் அணிகள் தலா ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன.
தற்போது இந்த வெற்றியின் மூலம் இந்த பட்டியலில் 5வது நாடாக ஸ்பெயின் இணைந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்