109 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துவந்த பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் சேவை முடிவுக்கு வந்தது.
ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதற்கு பாம்பன் ரயில் பாலம் முக்கிய
பங்காற்றி வந்தது. இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தை கட்டுவதற்கான பணிகள் 1913-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக முடிக்கப்பட்டது. பாம்பன் தூக்கு பாலம் வழியாக 200டன் எடையுள்ள கப்பல்கள், சிறிய ரக போர் கப்பல்கள் சென்று வந்தன. 109 ஆண்டுகள் கடந்த இந்த பாம்பன் ரயில் பாலத்தில், கடந்த 11 மாதங்களாக பழுது காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் உள்ளூர் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதற்கிடையே பாம்பன் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் முடியும் வரை தூக்கு பாலம் திறக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்ததன் அடிப்படையில், பாம்பன் பழைய தூக்கு பாலம் இனிமேல் திறக்கப்படாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரலாற்றுச் சின்னமாக விளங்கும் பாம்பன் ரயில் பாலத்தை புராதன சின்னமாக அறிவித்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நன்றி
Publisher: 1newsnation.com