மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழா மூன்றாம் நாளான இன்று மாணிக்கம் விற்ற லீலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய விழாவாக ஆகஸ்ட் 25-ம் தேதி சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 13-ம் தேதி சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம், சுற்றுக் கொடி மரங்களில் கொடியேற்றம் நடைபெற்றது. ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 18ம் தேதி வரை சந்திரசேகர் உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முதல் நாள் ஆகஸ்ட் 19-ம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை, ஆகஸ்ட் 20-ம் தேதி நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடைபெற்றது.
மூன்றாம் நாளான இன்று மாணிக்கம் விற்ற லீலையில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். மாலையில் கயிலாய பர்வதம், காமதேனு வாகன புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 22-ம் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை, ஆகஸ்ட் 23ம் தேதி உலவாக்கோட்டை அருளிய லீலை, ஆகஸ்ட் 24ம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, ஆகஸ்ட் 25ம் தேதி வளையல் விற்ற லீலையும் முக்கிய விழாவான சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் அன்றிரவு நடைபெறும்.
ஆகஸ்ட் 26ம் தேதி நரியை பரியாக்கிய லீலை, ஆகஸ்ட் 27ம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை, ஆகஸ்ட் 28ம் தேதி விறகு விற்ற லீலை, ஆகஸ்ட் 29ம் தேதி சட்டத்தேரில் எழுந்தருளல் நடைபெறும். ஆகஸ்ட் 30ம் தேதி மாலை பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியும், இரவு வெள்ளி ரிஷப வாகனம் எழுந்தருளலோடு திருவிழா நிறைவுபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருவிளையாடல் புராண வரலாறு: வீரபாண்டிய மன்னனின் மரணத்திற்குப் பின் அவரின் மகனான செல்வபாண்டியனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்தனர். வீரபாண்டிய மன்னனின் மனைவிமார்களும், பிள்ளைகளும் மன்னன் இறந்தவுடன் அரண்மனையில் இருந்த எல்லா பொருட்களையும் எடுத்துச்சென்று விட்டனர். எனவே செல்வபாண்டியனின் முடிசூட்டுதற்கு தேவையான நவமணிகள் இல்லாமல் திகைத்து, ஆலவாய் அண்ணல் சொக்கநாதரிடம் சென்று விண்ணப்பித்தனர். அப்போது கிரீடம் செய்ய விலைமதிப்பு மிக்க நவரத்தின கற்களை சிவபெருமானே வைர வியாபாரியாக வந்து அளித்தார். அத்துடன் செல்வபாண்டியனுக்கு அபிசேகப் பாண்டியன் என்ற பட்டப் பெயரையும் சூட்டும்படி கூறினார். செல்வ பாண்டியனின் முடிசூட்டு விழா நடந்த பின்பு வியாபாரியாக வந்தது சிவபெருமான் என்பதை அறிந்து போற்றினர்.
நன்றி
Publisher: www.hindutamil.in