இன்றைய எந்திர லோகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் குறித்த பேச்சு அதிக அளவில் பேசப்படுகிறது. இந்த சூழலில் 2033-ல் மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஏஐ-யின் ஆதிக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் கொடுத்துள்ளது ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட். அது குறித்து விரிவாக பார்ப்போம்.
20-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் தொடங்கியது ஏஐ-யின் பயணம். தொடக்கத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அதனை பயன்படுத்தி வந்தனர். 21-ம் நூற்றாண்டில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான ஏஐ கருவிகள் பயன்பாட்டுக்கு வந்தன. அங்கிருந்து தனது பயணத்தை தொடங்கிய ஏஐ, அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. நமது அன்றாட வாழ்வில் நமக்கே தெரியாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஏஐ இரண்டறக் கலந்துள்ளது.
இந்த சூழலில் 2033-ல் ஏஐ தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் எதார்த்த உலகில் மனித வாழ்வில் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள ஆர்வம் வர அதற்கான கேள்வியை ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன கூகுள் ‘பார்ட்’ வசம் கேட்டோம். அது தனித்தனியாக பல்வேறு பதில்களை தந்தது.
எல்லாம் குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் மயம்: குவாண்டம் கணினியியல் என்பது குவாண்டம் இயக்கவியலின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் புது வகை கம்யூட்டர். இது தற்போது பயன்பாட்டில் உள்ள கம்ப்யூட்டர் கணினிகளை காட்டிலும் திறன் வாய்ந்தவை. இது ஏஐ உட்பட பலவற்றில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2033-ல் குவாண்டம் கம்யூட்டர்கள் வணிகம் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் பயன்படுத்தலாம். இது புதிய ஏஐ அமைப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும். அது அதி திறன் வாய்ந்தவையாக இருக்கும். இதன் வளர்ச்சி தொடங்கி இருக்கும்.
AGI: Artificial General Intelligence (ஏஜிஐ) பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது இது சார்ந்த ஆய்வுகள் தொடக்க நிலையில் உள்ளன. ஏஐ ஆராய்ச்சி பணிகளில் ஏஜிஐ முக்கிய இலக்காக உள்ளது. மனிதர்களுக்கு நிகரான நுண்ணறிவு திறன் அல்லது அதற்கும் மேலான திறன் கொண்ட வகையில் இது இருக்கும். அது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
கம்ப்யூட்டர் விஷன்: எந்திரங்களுக்கு பார்வை கொடுப்பதன் மூலம் தன்னை சுற்றியுள்ள உலகம் குறித்த புரிதலை அது பெறும். இந்த வகை எந்திரங்கள் பல்வேறு பணிகள் செய்யும் வல்லமையை கொண்டிருக்கும். கிட்டத்தட்ட எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோ, கார் ஓட்டும், மருத்துவம் பார்க்கும், முகத்தை அடையாளம் காணும். அதுபோல கம்ப்யூட்டர் விஷன் பெற்ற எந்திரங்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும். 2033-ல் இந்த வகை ரோபோக்கள் அதிகம் பயன்பாட்டில் இருக்கும்.
ரோபோட்டிக்ஸ் துறை தற்போது உள்ளதை காட்டிலும் மேம்பாடு கண்டு இருக்கும் என தெரிகிறது. அதேபோல கல்வியிலும் ஏஐ பயன்பாடு தனித்துவமிக்கதாக இருக்கும் என தெரிகிறது.
வீடுகள் மற்றும் பணியிடங்கள் ஏஐ ஊடாக ஸ்மார்ட் ஆக மாற்றம் கண்டிருக்கும். இந்த இடங்களில் எனர்ஜி பயன்பாட்டை கண்காணிப்பது, பாதுகாப்பு வழங்குவது போன்ற பணிகளை ஏஐ எந்திரங்கள் செய்யும். மருத்துவம், உற்பத்தி மற்றும் போக்குவரத்து துறையில் ஏஐ மேம்பட்டிருக்கும் எனவும் ‘பார்ட்’ தெரிவித்துள்ளது.
மேலும், எந்திரங்களின் கற்றல் சார்ந்த அல்காரிதங்கள் மேம்பட்டிருக்கும். அது மனிதர்களை போலவே டேட்டாக்களை அறிந்து கொள்ள ஏஐ சிஸ்டங்களுக்கு வழிவகுக்கும்.
ஏஐ சார்ந்த நெறிமுறைகளில் வளர்ச்சி: வெளிப்படையான மற்றும் பொறுப்பு ஏற்கக்கூடிய நெறிமுறைகளை கொண்டுள்ள ஏஐ அமைப்புகளை கட்டமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும். இதன் மூலம் ஏஐ சார்ந்த பணிகளில் நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதே போல பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் லார்ஜ் லாங்குவேஜ் மாடல் நவீனம் கண்டிருக்கும்.
இப்படியாக ஏஐ-யின் எதிர்கால செயல்பாடு நம்மை அசர செய்கிறது. இருப்பினும் அதன் அச்சுறுத்தலையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனை ஆக்கப்பூர்வமான வகையில் குறைப்பது குறித்து சிந்திப்பதும் அவசியம். அதன் வழியே ஏஐ பயன்பாட்டை மனித நலனுக்கானதானதாக உறுதி செய்யலாம்.
| தொடர்வோம் |
முந்தைய அத்தியாயம்: AI சூழ் உலகு 3: மனிதர்களின் வேலையை பறிக்கும் வல்லமை கொண்டதா ஏஐ? – எழு வேலைக்காரா!
நன்றி
Publisher: www.hindutamil.in