2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதன் மூலம் இந்திய தடகள வரலாற்றின் அடையாளமாக மாறி வருகிறார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.
ஒலிம்பிக் போட்டிகளிலும், உலக தடகளப் போட்டிகளிலும் பெரிய அளவில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை சோபிக்கவில்லை என்பது மிகப்பெரிய குறையாக இருந்தது. விளையாட்டுப் பிரியர்களின் அந்த மாபெரும் மனக்குறையைத் தீர்த்து வைத்தவர் நீரஜ் சோப்ரா. 2021-ல் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்று தாயகத்தின் பெருமையை தலைநிமிரச் செய்தார்.
ஹரியாணாவின் பானிப்பட்டில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீரஜ், அங்குள்ள பிவிஎன் பள்ளியிலும், சண்டீகரிலுள்ள தயானந்த் ஆங்கிலோ-வேதிக் கல்லூரியில் பட்டப்படிப்பும் படித்தார். இளம் வயதிலேயே ஈட்டி எறிதலில் ஆர்வம் கொண்ட நீரஜ், தன்னை மெருகேற்றிக் கொண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஜொலித்தார். இதன்மூலம் இந்திய ராணுவத்தில் அவருக்கு சுபேதார் பணியிடம் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து திரும்பிப் பார்க்க அவருக்கு நேரமே இல்லை. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தார். 2016-ல் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, உலக ஜூனியர் போட்டியில் தங்கம், தெற்காசிய விளையாட்டில் தங்கம், 2017-ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், 2018-ல்ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம், 2018-ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் என வரிசையாக பதக்கங்களை அள்ளிக் குவித்தார்.
2021-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கத்தைத் தட்டி வந்தார் நீரஜ். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 7 பதக்கங்களில் ஒரே ஒரு தங்கம் நீரஜ் சோப்ரா வென்றதாகும். ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் தனிநபர் பிரிவில் 2 பேர் மட்டுமே தங்கம் வென்றுள்ளனர். 2008-ல் அபிநவ் பிந்த்ராவும் (துப்பாக்கிச் சுடுதல்), 2021-ல் நீரஜ் சோப்ராவும் (ஈட்டி எறிதல்) இந்தச் சாதனையை செய்துள்ளனர்.
2022-ல் நடைபெற்ற டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் முதலிடம் பிடித்து அசத்தினார் அவர். இதைத் தொடர்ந்து யூஜின் நகரில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் அவர் வெள்ளியை கைப்பற்றினார்.
இதன் மூலம் இந்திய தடகளத்தின் தவிர்க்க முடியாத வீரராக உருமாறியுள்ளார் நீரஜ்.
தற்போது ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று 88.77 தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
உலக ஈட்டி எறிதல் வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் நீரஜ். கடந்த மே 11-ம் தேதி இந்த அற்புதமான சாதனையை அவர் புரிந்துள்ளார். அவர் அதிகபட்சமாக 89.94 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து சாதனை படைத்துள்ளார். இது தேசிய அளவிலான சாதனையாகும்.
உலக சாம்பியன்ஷிப்பிலும், அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் இதைவிட கூடுதல்தூரத்துக்கு ஈட்டியை அவர் எறிந்து சாதனை படைப்பார் என விளையாட்டு நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அதிக மனோதிடம், இடைவிடாத பயிற்சி, விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற தீராத தாகம், ஊக்கம் அளிக்கும் பயிற்சியாளர்கள் என அவரது வெற்றிக்கு பல பிளஸ் பாயிண்டுகள் உள்ளன.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் தங்கம் வென்றிருந்தாலும், இதுவரை உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் தங்கம் வென்றதில்லை. அந்தக் குறையை தற்போதைய புடாபெஸ்ட் போட்டியில் அவர் போக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக்கிலும் அவர் சாதனை படைப்பார் என்று ரசிகர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
அதிக மனோதிடம், இடைவிடாத பயிற்சி, விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற தீராத தாகம், ஊக்கம் அளிக்கும் பயிற்சியாளர்கள் என அவரது வெற்றிக்கு பல பிளஸ் பாயிண்டுகள் உள்ளன.
நன்றி
Publisher: www.hindutamil.in