உலகக் கோப்பையில் கோலி, ரோஹித், ஸ்மித், ரூட் ஆகியோரை ‘மன்கடிங்’ செய்தால் என்ன ஆகும்?- அஸ்வின் ருசிகரம்!

மன்கடிங் செய்வது சரிதான் என்று வாதிடுபவர் அஸ்வின். இதை நியாயப்படுத்த அவர் கூறும் காரணங்களும் நியாயமானதே. கடைசி பந்து ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்னும் போது அந்த ஒரு ரன்னை எடுக்க ஒருவர் முன் கூட்டியே ரன்னர் முனை கிரீசைக் கடந்து முன்னேறினால் அது நியாயமா அப்போது அவரை மன்கடிங் செய்தால் அது தவறா? என்கிறார். கரெக்ட்தான். டி20 என்ற வணிக மயமான கிரிக்கெட் வளர்ச்சி கண்ட பிறகே எப்படியாவது வென்றேயாக வேண்டும் என்ற மனநிலை பேட்டருக்குச் சாதகமாகச் செயல்படும் போது மன்கடிங் நியாயம்தானே என்கிறார் அஸ்வின். நியாயம்தானே!

மீண்டும் ஏன் இந்த மன்கடிங் விவாதம் எழுந்ததென்றால். சமீபத்தில் முடிந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடரின் 2வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷதாப் கானை மன்கடிங் செய்தார் ஆப்கான் பவுலர் ஃபாசல்ஹக் பரூக்கி. இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. கிரீசை விட்டு ஷதாப் கான் முன்னேறிச் சென்றது உண்மைதான். அதனால் அவர் மன்கடிங் செய்யப்பட்டார் இதுவும் சரியே. ஆனால் பாகிஸ்தான் தோற்கவில்லை, நசீம் ஷா வந்து வெற்றி பெறச் செய்து ஹீரோவானார்.

பாபர் அசாம் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். அவர் ஆப்கான் சீனியர் வீரர் முகமது நபியுடன் நீண்ட வாதத்தில் ஈடுபட்டார். ஆப்கான் வீரர்களிடம் கைகுலுக்கவே மறுத்தார் ஷாஹின் ஷா அஃப்ரீடி.

இந்தச் சம்பவம் குறித்து அஸ்வின் தனது சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த போது, ‘கிரீசிற்குள் நில்லுங்கள், பந்து டெலிவரி ஆனபிறகு ஓடத்தொடங்குங்கள்’ என்று வீரர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:

இதுதான் சூழ்நிலையின் நியாயமான மதிப்பீடு.

உலகக் கோப்பை அரையிறுதியில் அல்லது ஒரு நெருக்கடியான ஆட்டத்தில் கோலி, ரோஹித், ஸ்மித், ரூட் அல்லது எந்த ஒரு முக்கியமான பேட்டரையும் இப்படி மன்கடிங் முறையில் ரன் அவுட் செய்வதை கற்பனை செய்து பாருங்கள். அவ்வளவுதான் நரகமே இடிந்து விழுந்தது போல் கூக்குரல்கள் எழும். இன்னும் சொல்லப்போனால் ‘பண்புப் படுகொலையே’ செய்யப்பட்டு விடும். இன்னும் பலரும் இதனை ஒரு அவுட் ஆக்கும் முறையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இதற்கு ஒரு தீர்வுதான் உள்ளது. எந்த பேட்டராக இருந்தாலும் என்ன சூழ்நிலையாக இருந்தாலும் பவுலர் கையை சுத்துவதை நெருக்கமாக கவனித்து அதன் பிறகே கிரீசிலிருந்து கிளம்ப வேண்டும். இதைச்செய்யாமல் ஊருக்கு முன்னாடியே கிரீசை விட்டு வெளியேறி மன்கடிங் செய்யப்பட்டு அவுட் ஆனால் அந்த பவுலரை கரகோஷம் செய்து பாராட்டி பேட்டரிடம் நீங்கள் இன்னும் கொஞ்சம் யோசித்துச் செயல்பட்டிருக்கலாம் என்றுதான் கூற வேண்டும்.

“பவுலர் ஆக்‌ஷனை பூர்த்தி செய்யவே இல்லை. அவர் இதனை 5-வது அல்லது 6வது ஓவரில் செய்ய வேண்டியதுதானே” என்ற வாதங்கள் நொண்டிச்சாக்குதான். பவுலர் கையைச் சுழற்றி பந்தை டெலிவரி செய்யத் தயாராகி விட்டு ரன்னர் முனை பேட்டரை ரன் அவுட் செய்ய முடியாது. ஏனெனில், விதிப்படி அது தவறு.

இப்போது எல்லா அணிகளும் இதைச் செய்வதில்லை. ஆனால் உலகக்கோப்பை வருவதால் நிச்சயம் இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. சும்மா ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் பேசி நாங்கள் என்ன ஆனாலும் அப்படிச் செய்ய மாட்டோம் என்று சொல்வதெல்லாம் எதிரணியினருக்கு ஒரு சாளரத்தை திறந்து விடுவதில்தான் போய் முடியும். எந்த ஒரு அணியும் தங்கள் வழியில் வரும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் உலகக்கோப்பையை வெல்வதென்பது வாழ்நாள் சாதனையல்லவா.

இறுதியாக, வெற்றி பெறுதல்தான் அனைத்துமா?

சிலருக்கு வெற்றி பெறுவதுதான் அனைத்தும். மற்ற சிலருக்கு அப்படி இல்லாமல் இருக்கலாம். நாம் இரண்டு நிலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏ எனெனில் நாம் அனைவரும் வேறுபட்டவர்கள்.

கிரிசிற்குள் நில்லுங்கள்! நிம்மதியாக வாழுங்கள்!

என்று அஸ்வின் தன் பதிவை முடித்துள்ளார்.

அஸ்வின் ஏற்கெனவே இதைப்பற்றி கூறும்போது, எதிரணியினர் என்னை இப்படி மன்கடிங் செய்ய மாட்டார்கள் என்று நான் அறிந்தால் நிச்சயம் எனக்குச் சாதகமாகவே அதைப் பயன்படுத்துவேன் என்றார், இப்போதும் அதையேதான் வேறு மொழியில் கூறியுள்ளார்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *