சென்னை: இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரின் போட்டிகளை பார்க்க டிக்கெட்டிங் பார்ட்னராக புக் மை ஷோ உள்ளது. இதில் போட்டிகளுக்கான டிக்கெட்டை பெறுவது மிகவும் கடினம் என ரசிகர்கள் விரக்தியுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளன.
இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் (பயிற்சி போட்டி உட்பட) புக் மை ஷோ தரப்பில் ஆன்லைனில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி டிக்கெட் விற்பனை சார்ந்த நோட்டிபிகேஷனை பெற பயனர்கள் அதில் பதிவு செய்தனர். மாஸ்டர்கார்டு வகை ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி வரும் பயனர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்யும் அம்சமும் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ரசிகர்கள் டிக்கெட் பெற புக் மை ஷோவில் போட்டி போட்டனர். இந்திய அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் நேற்று (ஆக.29) இந்த தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. டிக்கெட் விண்டோ ஓப்பன் ஆன சில நிமிடங்களில் டிக்கெட் அனைத்தும் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது பல மணி நேரம் விர்ச்சுவல் லைனில் காத்திருந்த ரசிகர்களை விரக்தி அடைய செய்தது. அது குறித்து சமூக வலைதளத்தில் தங்கள் கருத்தை ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.
“உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்டை பெறுவது யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதை காட்டிலும் கடினம்” என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்ன ஒரு ஏமாற்று வேலை. டிக்கெட் பதிவு செய்வதில் மிகவும் மோசமான அனுபவத்தை வழங்கியது புக் மை ஷோ. பிசிசிஐ ரசிகர்கள் குறித்து துளியும் கண்டுகொள்ளவில்லை. உலகக் கோப்பையை வெல்லும் நோக்கில் இந்திய அணி மேற்கொள்ளும் பயிற்சியை காட்டிலும் கடினமான முயற்சி இருந்தால் தான் டிக்கெட் பதிவு செய்ய முடியும் என ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
Getting a ticket for just one ICC World Cup match is harder than cracking UPSC pic.twitter.com/l45znJQQRX
நன்றி
Publisher: www.hindutamil.in