சென்னை: யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் பிரத்யேக காணொலி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘நித்தம் ஒரு வானம்’ படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனம் சார்பில் பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு ‘ஸ்டார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். கதையின் நாயகனாக கவின் நடிக்கிறார். 2 கதாநாயகிகள் இதில் நடிக்க இருக்கின்றனர்.
மலையாள நடிகர் ஒருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. தற்போது 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு சார்பில் பிரத்யேக காணொலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. காணொலியின் தொடக்கத்தில் பாரதியார் உருவ பொம்மை காட்சிப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து கவின் நடந்து செல்ல அவருக்கு பின்னால் அழுத்தமான கவிதை ஒன்றும் ஒலிக்கிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in