புதுடெல்லி: அரசியலில் தனக்கு ஆர்வமில்லை என்றும். பிரதான கட்சிகளில் இருந்து அழைப்பு வந்ததாகவும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். 2024-ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சேவாக் நாடாளுமன்ற உறுப்பினராக விரும்புகிறார் என பயனர் ஒரு எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு அவர் இப்படி பதில் அளித்தார். முன்னதாக, எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, “ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாம் அனைவரும் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். நமது அசல் பெயரான ‘பாரத்’ என்பதை அதிகாரபூர்வமாக திரும்ப பெற நீண்ட தாமதமாகிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிசிசிஐ மற்றும் ஜெய் ஷாவை நான் கேட்டுகொள்கிறேன்” என தெரிவித்தார்.
அது சர்ச்சையானது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் சேவாக் கருத்தை விமர்சித்தனர். “கவுதம் கம்பீருக்கு முன்பே நீங்கள் எம்.பி-யாக இருந்திருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பேன்” என எக்ஸ் பயனர் ஒருவர் தெரிவித்தார். அதற்கு சேவாக் பதில் தந்துள்ளார்.
“எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. கடந்த இரண்டு தேர்தலின்போது பிரதான கட்சிகள் எண்ணை அணுகின. விளையாட்டு வீரர்கள் அரசியலில் நுழையக்கூடாது என்பதே எனது கருத்து. இவர்கள் அதிகாரத்துக்கான பசி மற்றும் மக்களுக்கான நேரத்தை ஒதுக்குவதில்லை என கருதுகிறேன். இதில் சிலர் விதிவிலக்காக செயல்படுவார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் மக்கள் தொடர்பாளராக இயங்குகிறார்கள்.
நான் கிரிக்கெட் விளையாட்டு உடன் இணைந்திருக்க விரும்புகிறேன். வர்ணனை செய்ய விரும்புகிறேன். நேரம் கிடைத்தால் மட்டும் பகுதி நேர எம்.பி-யாக இயங்குவதில் எனக்கு ஆர்வம் இல்லை” என சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 374 சர்வதேச போட்டிகளில் சேவாக் விளையாடி உள்ளார். 17,253 ரன்கள் குவித்துள்ளார். இதில் 38 சதங்கள் மற்றும் 72 அரை சதங்கள் அடங்கும். இந்திய அணி வீரர்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர் சேவாக்.
I am not at all interested in politics. Have been approached by both major parties in the last two elections. My view is that most entertainers or sportsman should not enter politics as most are their for their own ego and hunger for power and barely spare genuine time for…
நன்றி
Publisher: www.hindutamil.in