சென்னை: 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர்கள் ஒருவரும் அங்கம் வகிக்காத இந்திய அணியை உலகக் கோப்பை தொடருக்கு அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த தொடருக்கான அணியை நேற்று அறிவித்தது பிசிசிஐ. இதில் தமிழக வீரர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடைசியாக இதே போல கடந்த 2003 உலகக் கோப்பை தொடரின்போது தமிழக வீரர்கள் இடம்பெறாத இந்திய அணியை கங்குல் தலைமையில் பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன் பிறகு 2007, 2011, 2015 மற்றும் 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அனுபவ ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வினுக்கு எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் அழுத்தமாக சொல்லி வருகின்றனர்.
2007 உலகக் கோப்பை தொடரில் ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், விக்கெட் கீப்பராக இடம்பெற்றிருந்தார். 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை தொடரில் அஸ்வின் விளையாடி இருந்தார். 2019 உலகக் கோப்பை தொடரில் கோலி தலைமையிலான அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் இடம்பெற்றிருந்தனர்.
இந்திய அணி அறிவிப்பு: முன்னதாக,. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. 7 பேட்ஸ்மேன்கள், 4 ஆல்ரவுண்டர்கள், 4 பந்து வீச்சாளர்கள் என்ற அடிப்படையில் அணித் தேர்வு அமைந்துள்ளது. இளம் பேட்ஸ்மேன் திலக் வர்மா, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மற்றும் லெக் ஸ்பின்னர் யுவேந்திர சாஹல் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. நவம்பர் 19-ம் தேதி வரை 10 நகரங்களில் நடைபெற உள்ள இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த கிரிக்கெட் திருவிழாவில் கலந்து கொள்ளும் அணியை அறிவிக்க நேற்று (5ம் தேதி) கடைசி நாள் ஐசிசி ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உலகக் கோப்பைதொடருக்கான 15 பேர் கொண்டஇந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐநேற்று அறிவித்தது. 7 பேட்ஸ்மேன்கள், 4 ஆல்ரவுண்டர்கள், 4 பந்து வீச்சாளர்கள் என்ற கலவையில் இந்திய அணி தேர்வு அமைந்துள்ளது. பேட்ஸ்மேன்கள் வரிசையில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில்,விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல்,சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் உள்ளனர்.
மற்றொரு பிரதான சுழற்பந்துவீச்சளாராக குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார். இதனால் லெக் ஸ்பின்னரான யுவேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி, மொகமது சிராஜ் உள்ளனர். இளம் பேட்ஸ்மேன் திலக் வர்மா, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வாகவில்லை. அறிவிக்கப்பட்ட வீரர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் செப்டம்பர் 28-ம் தேதிக்குள் கடைசி நேர மாற்றங்களை அணிகள் மேற்கொள்ளலாம் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in