சென்னை: மாரிமுத்துவின் மரணத்தை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்று ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து இன்று காலை ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாரிமுத்துவின் திடீர் மரணம் குறித்து ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் கூறியதாவது: இதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. இன்று காலையில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வருவதாக சொல்லியிருந்தார். இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்து இப்படி ஆகியிருந்தால், அது வேறு. ஆனால் இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது குடும்பத்தினர், ‘எதிர்நீச்சல்’ டீம், ரசிகர்கள் அனைவருக்குமே மிகப்பெரிய இழப்பு. நாங்கள் ‘எதிர்நீச்சல்’ குழுவினர் அனைவருமே மருத்துவமனையில்தான் இருக்கிறோம். இதற்கு மேல் என்னால் எதுவும் பேசமுடியவில்லை’ இவ்வாறு திருச்செல்வம் சோகத்துடன் பேசினார்.
நன்றி
Publisher: www.hindutamil.in