‘தோனி, யுவராஜ் சிங் செய்ததை சூரியகுமார் யாதவ்தான் செய்ய முடியும் ரோஹித், கோலியாலும் முடியாது’ – ஹர்பஜன் சிங் 

புதுடெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் 11 வீரர்களில் சூரியகுமார் யாதவ் இருந்தே ஆக வேண்டும். அவர் இறங்கும் நிலையில் கோலி, ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன் கூட சூரியகுமார் போல் ஆட முடியாது என்று முன்னாள் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சனுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது போல் தெரிந்தாலும் விட்டு விட்டு அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும் போது ஒவ்வொரு போட்டியும் புதிய போட்டிதான் தொடர்ச்சி இருக்காது ஆகவே அவருக்குப் பதிலாக சூரிய குமார் யாதவ்வை எடுத்திருக்கிறார்கள் என்றால் அது சூரியகுமார் யாதவ் மேல் இருக்கும் நம்பிக்கையை விட சஞ்சு சாம்சன் மீதான அவநம்பிக்கை என்றே கூற வேண்டியுள்ளது. ஆனால் ஹர்பஜன் சிங் சூரிய குமார் போல் சஞ்சுவெல்லாம் ஆட முடியாது என்று ஒரே போடாக போட்டு விட்டார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய உரையாடலில் ஹர்பஜன் சிங் கூறும்போது, “சூரிய குமார் யாதவ் ஒரு நிறைவான… நிறைவான வீரர். சஞ்சு சாம்சன் குறித்து கடினமான முடிவை எடுத்ததாக நான் கருதவில்லை. சஞ்சுவும் மிக நல்ல வீரர் என்பதை நானும் அறிவேன். 15 வீரர்களைத்தான் தேர்வு செய்ய முடியும். அதில் சஞ்சுவை விட சூரியகுமார் யாதவ் தேர்வு சரியான தேர்வே.

மிடில் ஓவர்களில் சூரியகுமார் யாதவ்விடம் இருக்கும் ஆட்டம் சஞ்சுவிடம் கிடையாது. சஞ்சுவும் முதல் பந்திலிருந்தே பெரிய ஷாட்களை ஆடக்கூடியவர்தான், ஆனால் சூரியகுமார் யாதவ் மீதான நம்பகத்தன்மை வேறு. பெரிய ஸ்கோரை எடுப்பவர் சூரியா. சஞ்சு சாம்சன் ஆடும் விதத்தில் நிறைய ரிஸ்க் இருப்பதால் அவுட் ஆவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன..

சூரியகுமார் யாதவ் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் என்ன ஆடிவிட்டார் என்று பலரும் கேட்கின்றனர். நான் அவர்களிடம் கேட்பதெல்லாம் டி20-யில் அவர் என்ன ஆடவில்லை? ஒருநாள் போட்டிகளில் 20 ஓவர்கள் இருக்கும் போது சூரியகுமார் இறங்குகிறார் என்றால் அந்த நிலைக்கு அவரை விட்டால் சரியான வீரர் இல்லை என்கிறேன் நான்.

அந்த டவுன் ஆர்டரில் சூரியகுமார் ஆடுவது போல் விராட் கோலி, ரோஹித் சர்மாவினால் கூட ஆட முடியாது. ஏனெனில் நம்பர் 5-6-ல் இறங்கி ஆடும் கடினமான வேலையைச் செய்கிறார் சூரியகுமார். எம்.எஸ்.தோனி செய்ததை, யுவராஜ் சிங் செய்ததை சூரியகுமாரால்தான் செய்ய முடியும்.

மிடில் ஆர்டரில் ஆடுவது ஒருநாள் போட்டிகளில் கடினமானது. ஓப்பனிங் என்றால் எங்கு ரன் அடிக்க முடியும் என்பது சுலபம். நிறைய ஓவர்கள் இருக்கும். ஆனால் 20-25 ஓவர்கள் சென்று ஒருவர் இறங்கும்போது இடைவெளிகளைக் கண்டுப்பிடித்து அதற்கான ஸ்ட்ரோக்கை சரியாக ஆடி பவுண்டரிகள் எடுக்க வேண்டும். இதை சூரியகுமார் போல் வேறு எந்த ஒரு வீரரும் செய்ய முடியாது என்பதுதான் என் துணிபு.

நான் என் அணியில் சூரியாவைத்தான் தேர்வு செய்வேன், காரணம் அவர் இருக்கிறார் என்றாலே எதிரணியினருக்கு கிலிதான். அவர் ஆடுகிறாரோ, இல்லையோ. அவர் கிரீசில் இருக்கும் நேரமெல்லாம் எதிரணிக்கு பிரஷர் தான். ஏனெனில் போட்டியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் ஆட்டம் அவரிடம் இருக்கின்றது. 20 பந்துகளில் 50-60 ரன்களை அடித்து விடுவார் சூரியா. எனவே இவர் அணியில் இருக்க வேண்டும், அவரை உட்கார வைத்து விரயம் செய்தல் கூடாது.

நான் இந்த உலகக்கோப்பை இந்திய அணியில் செஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இடது கை வேகப்பந்து வீச்சாளர் வலது கை பேட்டருக்கு வீசுவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். 3 ஸ்பின்னர்கள் ஆடுகிறார்கள் என்றால் ஒரு இடது கை ஸ்பின்னர், ஒரு லெக் ஸ்பின்னர், ஒரு ஆஃப் ஸ்பின்னர் வேண்டும். ஆனால் மூன்று பேருமே இடது கை ஸ்பின்னர்களாக உள்ளனர். இதுதான் அதிர்ச்சிகரமாக உள்ளது” இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *