சென்னை: ஹோண்டா நிறுவனத்தின் எஸ்யுவி வகை `எலவேட்’ கார் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா நிறுவனம் சார்பில் எஸ்யுவி வகையிலான எலவேட் என்னும் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநர் யூச்சி முராட்டா காரை அறிமுகம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஹோண்டாவுக்கு நம்பிக்கைக்குரிய இடமாக தமிழகம் விளங்கி வருகிறது. குறிப்பாக தேசிய அளவில் ஹோண்டா விற்பனையில் 10 சதவீத பங்களிப்பை தமிழகம் வழங்குகிறது. தற்போது அறிமுகமான எலவேட் காரில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து வரும் 2030-க்குள் 5 எஸ்யுவி வகை கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் நவீன அம்சங்களுடன்கூடிய மின்சார கார்கள் அறிமுகப்படுத்தப்படும். ஹோண்டா கார்கள் ஏற்றுமதி 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், நிறுவனத்தின் முதுநிலை ஆலோசகர் யூச்சி இச்சிகே, தென்மண்டலத் தலைவர் டி.வைத்தமாநிதி, கார்ப்பரேட் பிரிவு தலைவர் விவேக் ஆனந்த் சிங், திட்டப் பிரிவு அதிகாரி ராகவ் கிருஷ்ணன் மற்றும் விநியோக பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
ஹோண்டாவின் நடுத்தர அளவிலான எஸ்யுவி வகையைச் சேர்ந்த எலவேட் கார்களின் அறிமுக விலை (எக்ஸ் ஷோரூம்) ரூ.10.99 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கு உதவிபுரியும் வகையில் ஏடிஏஎஸ் (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம்) எனப்படும் நவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல் 1.5 எல்ஐ வி டெக் பெட்ரோல் இன்ஜின், பரந்த இட வசதி, சொகுசான இருக்கைகள், 6 ஏர் பேக், ஸ்மார்ட் வாட்ச், அலெக்சா மூலம் இயக்குதல், லேன் வாட்ச் கேமரா, லிட்டருக்கு 15-16 கிமீ மைலேஜ், 7 நிறங்கள், குறைந்தபட்சம் 3 ஆண்டு வாரண்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் நேற்று முதல் ஹோண்டா எலவேட் விற்பனைக்கு வந்துள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in