மும்பை: இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க நாட்டு சிப் மேக்கர் நிறுவனமான என்விடியா (NVIDIA) உடன் இணைந்துள்ளதாக முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்தியாவில் அதிக திறன் கொண்ட ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும் என என்விடியா தெரிவித்துள்ளது. அண்மையில் என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஏஐ மற்றும் செமிகன்டக்டர் சிப் சார்ந்த இந்தியாவின் இலக்குகள் முன்னேற்றம் காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முழுவதும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட லார்ஜ் லாங்குவேஜ் மாடலை (LLM) அடிப்படையாக கொண்டு இயங்கும் ஜெனரேட்டிவ் ஏஐ அப்ளிகேஷன்களை கட்டமைக்க இது உதவும். அதோடு இதற்கு பல்வேறு தேசிய மொழிகளில் பயிற்சி கொடுக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி சிபியு, ஜிபியு, நெட்வொர்க்கிங், ஏஐ இயக்க முறைகள் மற்றும் அதிநவீன ஏஐ சூப்பர் கம்ப்யூட்டர் கட்டமைப்பு சார்ந்த தொழில்நுட்பத்தை ஜியோவுக்கு என்விடியா வழங்கும் என தெரிகிறது. ஜியோ தரப்பில் பயனர்கள் மற்றும் ஏஐ உள்கட்டமைப்புகள் நிர்வகிக்கப்படும் என தெரிகிறது.
இதன் மூலம் அதிநவீன ஜிஎச்20 கிரேஸ் ஹோப்பர் சூப்பர் சிப் மற்றும் டிஜிஎக்ஸ் கிளவுடுக்கான அணுகல், ஏஐ சூப்பர் கம்ப்யூட்டிங் சார்ந்த கிளவுட் சேவை உள்ளிட்டவை என்விடியா தரப்பில் கிடைக்கும்.
நன்றி
Publisher: www.hindutamil.in