லாகூர்: இந்திய கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது முடியாத காரியமாக இருக்கும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியில் பவுலிங் ஆல்ரவுண்டர் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. நவம்பர் 19-ம் தேதி வரை 10 நகரங்களில் நடைபெற உள்ள இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடரில் அக்டோபர் 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அகமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்நிலையில், அக்தர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஃபேவரைட் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்தியா அணியை வீழ்த்துவது முடியாத காரியம். இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடினாலும் அதேநிலை தான். அதற்கு காரணம் இரண்டு அணிகளும் ஆசிய அணிகள். வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு, பேட்டிங் என அனைத்திலும் சம பலத்தில் இந்த அணிகள் உள்ளன. பாகிஸ்தான் அணியில் பவுலிங் ஆல்ரவுண்டர் இல்லை.
முன்பு பாகிஸ்தான் அணியின் பேட்டிங் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. ஆனால், இப்போது அணியின் பேட்டிங் நிலை பெற்றுள்ளது. இந்த அணி நிலையாக விளையாடி இலக்கை எட்டும் வல்லமை பெற்றுள்ளது” என அக்தர் தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: www.hindutamil.in