2019 உலகக் கோப்பையை உண்மையில் நியூஸிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே பகிர்ந்தளித்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் நியூஸிலாந்து அணி அரை உலக சாம்பியன்தான். இப்போது 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் வரவிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை முதல் ஒருநாள் போட்டியில் உலக சாம்பியன் இங்கிலாந்தை பந்தாடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மற்ற அணிகளுக்கு ‘நாங்களும் ரேஸில் இருக்கிறோம்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்னொரு தற்செயலான விஷயம் என்னவெனில் 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து – நியூஸிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இதுவாகும்.
கார்டிஃப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 45.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 297 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு செம உதையை வழங்கி வெற்றி பெற்றது. நியூஸிலாந்து தொடக்க வீரர் டெவன் கான்வே 121 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 111 ரன்களையும், டேரில் மிட்செல் மிரட்டலாக ஆடி 91 பந்துகளில் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 118 ரன்களையும் எடுத்து இருவருமே நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். இதில் முக்கியமான விஷயம் இங்கிலாந்தின் ஆக டைட் பவுலரான ஆதில் ரஷீத் 8 ஓவர்களில் 70 ரன்கள் விளாசப்பட்டார். தொடக்கத்தில் வீசும் இடது கை ஸ்விங் பவுலர் டாப்லி 6 ஓவர்களில் 47 ரன்கள் வாரி வழங்கினார்.
இங்கிலாந்து தோற்றது பிரச்சனையில்லை. ஆனால் ஆடிய விதம் உலகக் கோப்பைக்கு முன்பாக அந்த அணி இன்னும் அணி திரளவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. 370 – 80 ரன்கள் எடுக்க வேண்டிய மட்டை பேட்டிங் பிட்சில் வெறும் 291 ரன்களையே எடுத்ததுதான். அதோடு பவுலிங் ஒன்றுமில்லாமல் போய் 45.4 ஓவர்களில் 297 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகளில் நியூஸிலாந்து வென்றது. உலகக் கோப்பையில் இரு அணிகளும் மோதும் முதல் போட்டியிலிருந்தே இங்கிலாந்துக்கு பிரஷர் ஏற்றும் வெற்றியாக அமைந்ததே.
பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பை அணியில் நுழைந்து அனாவசியமாக இடையூறு செய்வதாகவே படுகிறது. அவர் நேற்று 69 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 52 ரன்கள் மட்டுமே எடுத்தார். தேவையில்லாமல் ராகுல் திராவிட் போல் பரிசோதனை செய்கிறோம் என்று ஹாரி புரூக்கை ஓப்பனிங் இறக்கி விட்டார்கள். 41 பந்துகளில் 25 ரன்களை மட்டுமே எடுத்தார். அவர் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் வீரர் அவரைத் தொடக்கத்தில் இறக்கி காலி செய்தனர். எல்லாம் பென் ஸ்டோக்சை அணியில் எப்படியாவது பொருத்த வேண்டும் என்று பரிசோதனை செய்து பார்க்கின்றனர். பேர்ஸ்டோவை அணியில் எடுக்காமல் உட்கார வைத்தனர்.
ஜாஸ் பட்லரும் அவரது வேகத்துடன் ஆடவில்லை. அவர் 68 பந்துகளில் 72 ரன்களையே எடுத்தார். பொதுவாக 68 பந்துகளில் அவர் சதமெடுக்கக் கூடியவர். டேவிட் மலானும் 53 பந்துகளில் 54 ரன்களையே எடுத்தார். 2015 உலகக்கோப்பையில் படுதோல்விக்குப் பிறகு இயான் மோர்கன் தலைமையில் எழுச்சி பெற்ற இங்கிலாந்து அதன் பிறகு 70% மேட்ச்களை வென்று 2019-ல் உலக சாம்பியன்களாக எழுச்சி கண்டது.
ஆனால் நேற்று ஆடிய இங்கிலாந்து அணியிடம் அத்தகைய எழுச்சியின் சுவடு கூட காணவில்லை. ஜோ ரூட் 15 பந்துகளில் 6 ரன்களையே எடுத்துத் திணறினார். டெஸ்ட் போட்டிகளில் ரிவர்ஸ் ஸ்வீப்பையெல்லாம் ஆடும் ஜோ ரூட், ஏன் அப்படி ஆடினார் என்பது புரியாத புதிர். மேலும் நியூஸிலாந்தின் ஸ்பின்னர் ரச்சின் ரவீந்திரா 3 பெரிய விக்கெடுகளான ரூட், மலான், ஸ்டோக்ஸ் ஆகியோரை காலி செய்தார். இதுவும் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கான தயாரிப்பல்ல, இன்னும் ஸ்பின் பலவீனம் போகவில்லை என்று தெரிகிறது.
டெவன் கான்வேவுக்கு இந்தப் பிட்சைப் பற்றி தெரிந்தாலும் இங்கிலாந்து அதிக ஸ்கோரை எடுத்தது என்றார். ஆனால் இங்கிலாந்து உண்மையில் முழு பலத்துடன் ஆடியிருந்தால் தங்கள் பழைய ஆக்ரோஷத்தை, வேடிக்கையாகக் கூற வேண்டுமெனில் டெஸ்ட் போட்டி ஆக்ரோஷத்தைக் காட்டியிருந்தால் நிச்சயம் ஸ்கோர் 300 – 320 ரன்களைக் கடந்திருக்கும். இன்னும் ஆக்ரோஷம் காட்டியிருந்தால் 350-370 வரை சென்றிருக்கும். ஆனால் இங்கிலாந்திடம் அந்தப் பழைய சுவடு தெரியவில்லை.
ஆனால் மாறாக நியூஸிலாந்து அணியில் டெவன் கான்வே மிக அற்புதமாக ஒரு தொடக்கத்தைக் கொடுக்க டெஸ்ட் போட்டியில் லொட்டு வைத்து ஆடும் மிட்செல் நேற்று வெளுத்து வாங்கி விட்டார். இத்தனைக்கு அவர் 54 பந்துகளில்தான் அரைசதம் கண்டார். ஏற்கெனவே 2 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசியிருந்த மிட்செல், இங்கிலாந்தின் விக்கெட் வீழ்த்தும் நம்பக பவுலர் ஆதில் ரஷீத்தை முதலில் கவனித்தார்.
முதலில் லாங் ஆஃபில் சிக்ஸ், பிறகு ஸ்கொயர் லெக்கில் பவுண்டரி. பிறகு மீண்டும் லாங் ஆனில் பவுண்டரி. இடையில் கான்வே சதம் எடுக்க இதைக் கொண்டாடும் விதமாக ரஷீத்தின் ஓவரில் மிட்செல் 6, 4, 6 என்று விளாசித்தள்ளினார். 84 பந்துகளில் சதம் கண்டார். அதாவது அரைசதத்துக்குப் பிறகு 30 பந்துகளில் மேலும் 50 ரன்கள் எடுத்து சதம் கண்டார். கடைசி 7 பந்துகளில் 18 ரன்களை மேலும் விளாசி 118 ரன்களை வெளுத்துக் கட்டினார் மிட்செல். இங்கிலாந்து படுதோல்வி கண்டது. இங்கிலாந்து உண்மையில் இந்தத் தோல்வியினால் அதிர்ச்சி அடைந்தது என்றே கூற வேண்டும்.
நன்றி
Publisher: www.hindutamil.in