கும்பகோணம்: சுவாமிமலையில் பிடாரி எனும் ஏகவீரி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது என கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் மு.கலா தெரிவித்தார்.
கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை பகுதியில் உள்ள ஒரு வயலில் பழமையான சிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர்கள் செந்தில்குமார், ஸ்ரீதர் ஆகியோருடன், கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் மு.கலா அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்தச் சிலை 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, 4 அடி உயரமும், 2.5 அடி அகலமுள்ள பிடாரி எனும் ஏகவீரி அம்மன் சிலை என்பது தெரியவந்தது.
இது குறித்து பேராசிரியர் மு.கலா கூறியது: தொடக்க காலத்தில் தமிழகத்தில் பெண் தெய்வ வழிபாடு இருந்த போது தவ்வை, கொற்றவை, சப்தமாதர்கள், விநாயகி போன்ற பெண் தெய்வங்களுக்குத் தனியாக கோயிலில் அமைத்து விழா கொண்டாடியுள்ளனர். ஆனால் இந்த பிடாரி எனும் ஏகவீரிக்கு மட்டும் ஊருக்கு வெளியில் கோயில் அமைத்து, காவல் தெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.
இவருக்கு எல்லைப் பிடாரி என்று மற்றொரு பெயரும் உண்டு. தலையில் கரண்ட மகுடத்துடனும், கழுத்தில் ஆபரணங்களுடனும், கைகளில் வளையல்களுடனும் காட்சி தருகிறார். மேலும், வலது காதில் பிடாரி சிலைக்கேற்ப உரித்தான பிரேத குண்டலமும், இடது காதில் பத்ரகுண்டலமும் உள்ளது.
8 கைகளுடன் காட்சி தரும் இந்த சிலையின் வலது மேல்கையில் சூலாயுதம், உடுக்கை, வாள், குறுவாள் காணப்படுகிறது. இடது மேல்கையில் பாசம், கேடயம், அசுரனின் தலையும் காணப்படுகிறது. இதேபோல, மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் இடது மேல் கையை தன் இடது தொடைக்குச் சற்று மேலாக வைத்துள்ளார்.
வலது காலை சற்றே மடித்து உட்குதியாசனமாக இல்லாமலும், ராஜலீலாஸனமாகவும் இல்லாமலும் ஒரு வித்தியாசமான கோலத்தில் உள்ளார். இவரை வணங்கி விட்டு போருக்கு சென்றால் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை அதிகமாக இருந்த நம்பிக்கையால், அரசர்கள் போருக்குச் செல்வதற்கு முன் இவரை வணங்கி விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனால் இவர் போர் தெய்வமாகவும் அழைக்கப்பட்டார்.
மேலும், இவர் காளியின் அம்சமாகவும், உக்கிரத்துடன் இருப்பதால் ஊரின் காவல் தெய்வமாகவும் கருதப்பட்டதால், இவர் பெரும்பாலும் ஊரின் எல்லைப் பகுதியிலேயே காட்சி தருகிறார். இதேபோல, இந்தப் பகுதி மக்கள் விவசாயப் பணிகளை தொடங்கும் போதும், முடிக்கும் போதும், தவறாமல் இவரை வணங்குவது வழக்கம். இது போன்ற கலை நயத்துடன் காணப்படும் சிலைகளை மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி
Publisher: www.hindutamil.in