இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள ‘தி வேக்சின் வார்’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு ‘தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது’ பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘தி வேக்சின் வார்’ (The Vaccine War). அனுபம் கெர், நானா படேகர், சப்தமி கவுடா மற்றும் பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்லவி ஜோஷி தயாரித்துள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – கரோனா காலக்கட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களும், அதையொட்டி தடுப்பூசி தயாரிக்கப்பட்டதையும் கதைக்களமாக கொண்டு படம் உருவாகியுள்ளது. கோவிட் 19 தடுப்பூசியை தயாரிக்க பாடுப்பட்ட விஞ்ஞானிகளின் உழைப்பையும், தியாகத்தையும் ட்ரெய்லர் பறைசாற்றுகிறது. உண்மைக்கதை எனவும், இந்தியாவின் முதல் உயிரி – அறிவியல் திரைப்படம் எனவும் ட்ரெய்லரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிக்கும்போது ஏற்பட்ட தடங்கல், போராட்டம், எமோஷன் என கரோனா தடுப்பூசி தயாரிப்பை மீளுருவாக்கம் செய்யும் வகையில் படம் உருவாகியிருப்பதை காட்சிகள் உணர்த்துகின்றன. படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ:
நன்றி
Publisher: www.hindutamil.in