சென்னை: ’மார்க் ஆண்டனி’ படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’ படம் நேற்று வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்துக்கு கிடைக்கும் வரவேற்பையொட்டி நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மார்க் ஆண்டனி நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்களாகிய இந்த தெய்வங்கள் மற்றும் மேலே இருக்கும் தெய்வங்களின் ஆசிர்வாதம் இல்லாமல் எந்த படம் வென்றதில்லை. ’மார்க் ஆண்டனி’ படம் ப்ளாக்பஸ்டர் என்று கேள்விப்படும்போது, என்னை மட்டுமில்லாமல் எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கம் ஆகியவற்றை பாராட்டுவதை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக உள்ளது.
நீங்கள் கொடுத்த காசுக்கு நீங்கள் சந்தோசப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழகம் தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் கூட ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள். இதை மனதில் வைத்து அடுத்தடுத்த நல்ல படங்களை தருவேன். நண்பர்கள் பலரும் எனக்காக பதிவிட்டனர். குறிப்பாக என் டார்லிங் கார்த்தி, டார்லிங் வெங்கட் பிரபு, டார்லிங் சிம்பு என எல்லாருக்கும் என்னுடைய நன்றி. உங்களால் கண்டிப்பாக நான் இன்று நிம்மதியாக தூங்குவேன். ஏற்கெனவே நான் உறுதியளித்தபடி ஒவ்வொரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் நான் விவசாயிகளுக்கு வழங்குவேன்”. இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
நன்றி
Publisher: www.hindutamil.in