மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் இன்று புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் கனவில் தோன்றிய பெருமாள், மதுரை மாநகர் வடக்கு எல்லையில் கோயில் நிர்மாணிக்கும்படி உத்தரவு கொடுத்ததால், பிரசன்ன வெங்கடாசலபதி என்ற கோயிலை அவர் நிர்மாணித்தார். இக்கோயிலில் பெருமாள் தெற்கு முகம் பார்த்து அருள்பாலிக்கிறார். இங்கு திருவேங்கடமுடையான் எழுந்தருள்வதற்கு முன்னரே ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்.
மேலும் கள்ளழகர் சித்திரைத் திருவிழாவின் போது எதிர் சேவையாக வந்து இங்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டு, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆண்டாள் மாலைகளை சாற்றிக்கொண்டு வைகையாற்றில் இறங்குகிறார். பின்பு கருடவாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார் என்பதும் இக்கோயிலுக்குரிய தனிச்சிறப்பாகும்.
சிறப்பு மிக்க கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவோண நட்சத்திரத்தை மையமாக வைத்து புரட்டாசி பெருந்திருவிழா கொண்டாடப் படுகிறது. அதனையொட்டி நேற்று காலையில் கோயில் முன்புள்ள கொடிமரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பிரசன்ன வெங்கடாசலபதி எழுந்தருளினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கள்ளழகர் கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடாகி எழுந்தருள்வர். முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும். செப்டம்பர் 28ல் உற்சவ சாந்தியுடன் புரட்டாசி பெருந்திருவிழா நிறைவுபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in