சென்னை: கடந்த 2007-ல் இதே நாளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி மிரட்டி இருந்தார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். அந்தப் போட்டியில் 12 பந்துகளில் 50 ரன்களை பதிவு செய்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவில் 2007-ல் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர்-8 சுற்றுப் போட்டியில் யுவராஜ் இந்த சாதனையை படைத்திருந்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. கவுதம் கம்பீர், சேவாக் மற்றும் யுவராஜ் ஆகியோர் அரைசதம் கடந்தனர். இதில் யுவராஜின் ஸ்ட்ரைக் ரேட் 362.50. மொத்தம் 16 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.
இதில் பிராட் வீசிய 19-வது ஓவரில் ஆஃப் மற்றும் லெக் என அனைத்து திசையிலும் பந்தை பறக்க விட்டிருந்தார் யுவராஜ். இந்த ஆட்டத்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் மீண்டும் அரைசதம் பதிவு செய்திருந்தார். அதன் மூலம் இந்திய அணி முதல் முறையாக டி20 உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல யுவராஜ் உதவியிருந்தார்.
இதேபோல 2011 உலகக் கோப்பை தொடரை வெல்லவும் உதவியிருந்தார். இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார். இந்திய கிரிக்கெட்டின் அசத்தல் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், கடந்த 2000 முதல் 2017-ம் ஆண்டு வரையில் தேசத்துக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். 402 சர்வதேச போட்டிகளில் விளையாடி 11,778 ரன்கள் மற்றும் 148 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். தனது அபார ஆட்டத்திறனால் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவர். புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்.
நன்றி
Publisher: www.hindutamil.in