மதுரை: பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் தொடர்ந்து 16 ஆண்டுகளாகவும், தேசிய அளவிலான போட்டியில் தொடர்ந்து 6 ஆண்டுகளாகவும் வாகை சூடி வருகின்றனர் மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள். மதுரை தல்லாகுளத்தில் அரசு உதவிபெறும் ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கல்வியோடு, விளையாட்டிலும் மாணவிகள் சாதனை புரிந்து வருகின்றனர்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரதியார் தின குழுப் போட்டி, குடியரசு தின குழுப் போட்டிகளில் ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் 14 வயது, 17 வயது, 19 வயது பிரிவுகளில் பங்கேற்று தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று வருகின்றனர். மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து 16 ஆண்டுகள் முதலிடம் பெற்றுள்ளனர்.
இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக வென்று வருகின்றனர். இதில் 5 முறை தங்கப்பதக்கம், 1 முறை வெள்ளிப் பதக்கம் வென்றனர். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவிகள் தமிழ்நாடு விளை யாட்டு கவுன்சில் மூலம் கட்டணமின்றி கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். பல மாணவிகள் மத்திய அரசு பணி வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ஓசிபிஎம் பள்ளி உடற் கல்வி ஆசிரியர் ராஜேஷ்கண்ணன் கூறியதாவது: தொடர் வெற்றிக்கு மாணவிகளின் கடும் உழைப்பும், தீவிர பயிற்சியும்தான் காரணம். பள்ளி மைதானத்தில் காலை 6.30 முதல் 8.30 மணி வரை, மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை பயிற்சி பெறுகின்றனர். தாளாளர் டேவிட் ஜெபராஜ் மாணவிகளுக்கு காலையில் இலவச உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளார். தலைமை ஆசிரியர் என்.மேரியும் உறுதுணையாக உள்ளார்.
70 பேரிலிருந்து 80 மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். அண்மையில் தேசிய பூப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை பாராட்டி தமிழக அரசு சார்பில் தலா 1 லட்சம் வீதம் 9 மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். இதுபோல், இதுவரை ரூ.40 லட்சம் வரை பரிசுத்தொகை பெற்றுள்ளோம். மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் பி.சர்மிளா, பெர்சீஸ் சிறப்பாக பயிற்சி அளித்து வருகின்றனர் என்று கூறினார்.
நன்றி
Publisher: www.hindutamil.in