சென்னை: உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ கொடுத்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஐசிசி உலக கோப்பைக்கான மதிப்புமிக்க கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐயிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிசிசிஐ-க்கு எனது மனமார்ந்த நன்றிகள். அன்புள்ள ஜெய்ஷா ஜி, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார்.
2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர், அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டிகளை சிறப்பு மாடத்தில் அமர்ந்து கண்டுகளிப்பதற்கான ‘கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள் அந்தத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இந்த கோல்டன் டிக்கெட் அண்மையில் வழங்கப்பட்டது.
அவரைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டரும், நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் இந்த டிக்கெட்டைப் பெற்றார். அந்த வகையில் நேற்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, உலக கோப்பை போட்டிகளை கண்டுகளிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.hindutamil.in