சிட்னி: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகர்களாக முன்னாள் கேப்டன் தோனி மற்றும் சச்சினை பிசிசிஐ நியமிக்கலாம் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்தவர் கில்கிறிஸ்ட்.
அண்மையில் இந்து குழுமத்தின் ஸ்போர்ட்ஸ்டார் உடனான பேட்டியில் அவர் இதனை தெரிவித்திருந்தார். இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இந்த முறை உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“நான் இந்திய கிரிக்கெட்டின் நிர்வாகக் குழுவில் இருந்தால் தோனி, சச்சின் ஆகியோரை இந்திய வீரர்களுடன் கலந்துரையாட செய்வேன். இதன் மூலம் அவர்களது அனுபவம் வீரர்களுக்கு கடத்தப்படும். அதேபோல இந்தியாவில் கடந்த 2011-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாடிய யுவராஜ் சிங்கின் அனுபவத்தையும் பகிர செய்வேன். அப்போதும், இப்போதும் அணியில் அங்கம் வகிக்கும் விராட் கோலி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சொந்த நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரை வீரர்கள் திறம்பட எதிர்கொள்ள உதவும் என நம்புகிறேன்” என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கான 15 வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்திய அணியில் வலது கை சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in