அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. சமூக வலைதளங்களின் வருகைக்குப் பிறகு திரைப்படங்களின் வசூல் குறித்து ரசிகர்கள் வெளிப்படையாக விவாதம் செய்வதும், தயாரிப்பு நிறுவனங்களே வசூல் தொகையை வெளியிட்டு விளம்பரம் செய்வதும் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில் இந்தியாவில் வெளியான படங்களில் இதுவரை அதிவேகத்தில் ரூ.1000 கோடி வசூலித்த படங்கள் குறித்து பார்க்கலாம்.
பாகுபலி 2: இந்தியாவிலிருந்து வெளியாகி ரூ.1000 கோடி வசூலித்த முதல் படம் ‘பாகுபலி 2’. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடித்த இப்படம் பான் இந்திய சினிமாக்களுக்கான கதவுகளை திறந்தது. இப்படத்துக்குப் பிறகே தென்னிந்தியப் படங்களுக்கான மவுசு வடமாநிலங்களில் கூடியது. இப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.1000 கோடியை தாண்டியது.
ஆர்ஆர்ஆர்: ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியான 16 நாட்களில் ரூ.1000 கோடி வசூலித்தது. மேலும் இப்படத்துக்குப் பிறகு மல்டிஸ்டார் படங்கள் அதிக அளவில் வரத் தொடங்கின. உலக அளவில் இப்படம் கவனம் ஈர்த்தது. இதில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவருக்கும் ஆஸ்கர் கிடைத்தது.
கேஜிஎஃப் 2: பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் வெளியான 16 நாட்களில் ரூ.1000 கோடி வசூலை தொட்டது. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தால் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், வட மாநிலங்களிலும் கூட பெரும் வரவேற்பை பெற்றது.
ஜவான்: ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ போன்ற படங்கள் ஏற்படுத்திய தாக்கம் பாலிவுட் உலகம் தென்னிந்திய இயக்குநர்களை தேடி வரும் சூழலை ஏற்படுத்தியது. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த பாலிவுட் மார்கெட்டை தூக்கி நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், தனது அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை அட்லீயிடம் ஒப்படைத்திருந்தார் ஷாருக். கிட்டத்தட்ட 3 வருடங்களாக உருவாகிய ’ஜவான்’ படம் கடந்த செப். 7 வெளியானது. 18 நாட்களில் இப்படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டியுள்ளது.
பதான்: ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி வசூல் படங்கள் கொடுத்த ஒரே இந்திய நடிகராக மாறியுள்ளார் ஷாருக்கான். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘பதான்’ திரைப்படம் வெளியான 27 நாட்களில் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்தது. அதற்கு முன்பாக ‘ஜீரோ’ படத்தின் படுதோல்விக்கு பிறகு சுமார் 5 வருடங்கள் எந்தப் படமும் நடிக்காமல் இருந்த ஷாருக் ‘பதான்’ வெற்றியின் மூலம் தான் ஒரு ‘பாலிவுட் பாட்ஷா’ என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்தார்.
நன்றி
Publisher: www.hindutamil.in