சென்னை: தன்னுடைய ‘எலி’ படத்தின்போது நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்த ‘இறுகப்பற்று’ இயக்குநர் யுவராஜ் தயாளன் மேடையில் கண்கலங்கினார்.
விக்ரம் பிரபு நடிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள படம் ‘இறுகப்பற்று’. விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இதில் படத்தில் இயக்குநர் யுவராஜ் தயாளன் பேசியதாவது:
“இந்த படத்தின் புரமோஷனுக்காக நாங்கள் வெளியிட்ட 8 நிமிட ‘கேப்’ வீடியோ பற்றி பேசுவதா, இல்லை என்னுடைய திரையுலக பயணத்தில் விழுந்த 8 வருட ‘கேப்’ பற்றி பேசுவதா என்கிற எண்ணம் தான் இங்கே வந்ததில் இருந்து எனக்கு ஓடிக் கொண்டிருந்தது. எட்டு வருடத்திற்கு முன்பு என்னுடைய ’எலி’ படத்தின் பத்திரிகையாளர் காட்சி இதே இடத்தில் நடந்தது உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. அப்படம் முடிந்து நான் மேடைஏறிய போது கடும் அமைதி நிலவியது. யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அது போன்ற அமைதிக்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று அது உலகப் புகழ் பெற்ற படமாக இருக்கவேண்டும். அல்லது அதற்கு நேரெதிராக இருக்கவேண்டும். அந்த அமைதி என்னை தூங்கவே விடவில்லை. அது என்னை கொன்றுவிட்டது. அதன்பிறகு சினிமாவைவிட்டு ரொம்ப தூரம் சென்றுவிட்டேன்” என்று கூறி கண்கலங்கினார்.
பின்னர் தொடர்ந்து அவர் பேசியதாவது: “என்னை மாதிரி ஒரு தோல்வி பட இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு வெற்றியை பரிசாக கொடுத்துவிட்டு அவரைப் பற்றி நிறைய பேசுவேன். இங்கே எனது முந்தைய தோல்விகளை பார்க்காமல், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று மட்டுமே கேட்டு தொடர்ந்து என்னை ஊக்கம் கொடுத்து இந்த படத்தின் கதையை சிலர் உருவாக்க வைத்தார்கள்.
ஆரம்பத்தில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் உங்களிடம் ஒரு நெருப்பு இருக்கிறது என்று அவர்கள் சொன்னபோது, நானே சாம்பலாகி விட்டேன் என்னிடம் என்ன நெருப்பு இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் ஒரு சின்ன கங்கு ஒன்றை என்னுள் பார்த்தவர்கள் அதை பெரிய நெருப்பாக மாற்றினார்கள். இந்தப் படத்தின் மூலம் எனது நேர்மையை நான் உங்களுக்கு காட்டுகிறேன்” இவ்வாறு யுவராஜ் தயாளன் பேசினார்.
நன்றி
Publisher: www.hindutamil.in