ராஜ்கோட்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 352 ரன்களைக் குவித்துள்ளது.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் இணை 8 ஓவர் வரை இணைந்து 78 ரன்களைச் சேர்த்தது.
பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் வார்னர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் மார்ஷூடன் கைக்கோக்க, இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 96 ரன்களுடன் அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷை குல்தீப் யாதவ் அவுட்டாக்கினார். அடுத்து ஸ்மித் 74 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 35 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி 254 ரன்களைச் சேர்த்தது.
அடுத்து வந்த அலெக்ஸ் கேரி 11 ரன்களிலும், மேக்ஸ்வெல் 5 ரன்களிலும், கேமரூன் கிரீன் 9 ரன்களிலும் நிலைக்காமல் கிளம்பினர். மார்னஸ் லாபுசாக்னே மட்டும் மற்றொருபுறம் நிலைத்து ஆடி வந்தார். ஆனால், அவரை 49-ஆவது ஓவரில் பும்ரா அவுட்டாக்க 72 ரன்களில் நடையைக் கட்டினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 352 ரன்களைச் சேர்த்தது. பேட் கம்மின்ஸ் 19 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா, முஹம்மது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை முதன்முறையாக முழுமையாக 3-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைக்கும்.
நன்றி
Publisher: www.hindutamil.in