ஹைதராபாத்: சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் இந்தியாவுக்கு வந்துள்ளது பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி.
வரும் வெள்ளிக்கிழமை அன்று உலகக் கோப்பை தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுகிறது. இந்தப் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது. தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி அன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2-வது பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. அக்டோபர் 6-ம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் விளையாடுகிறது. இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அக்டோபர் 14-ம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் அணி இந்தியா வருவதில் விசா சிக்கல் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2016 டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் இந்தியா வந்திருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இரு நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
பாகிஸ்தான் அணி: பாபர் அஸம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹின் ஷா அஃப்ரிடி, முகமது வாசிம்.
Pakistan team in Hyderabad, India. The video is here #CWC23 #WorldCup2023
– via PCB pic.twitter.com/eKOIGpy25x
— Farid Khan (@_FaridKhan) September 27, 2023
நன்றி
Publisher: www.hindutamil.in