ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியின் 4வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் இந்தியா 2 தங்கப் பதக்கங்கள் வென்றது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியின் 4-வது நாளான நேற்று மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா 469.6 புள்ளிகள் குவித்து உலக மற்றும் ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஆஷி சவுக்சே 451.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார். சீனாவின் ஜாங் குயாங்யு 462.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இஷா சிங், மனு பாகர், ரிதம் சங்க்வான் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 1,759புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றது. சீனா அணி 1,756 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், கொரியா அணி 1,742 புள்ளிகளுடன் வெண்கலப்ப தக்கமும் வென்றன.
ஆடவருக்கான ஸ்கீட் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனந்த் ஜீத் சிங் நருகா 58 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். குவைத்தின் அப்துல்லா அல்ரஷிதி 60 புள்ளிகளுடன் உலக சாதனையை சமன் செய்து தங்கப்பதக்கம் வென்றார். ஆடவருக்கான ஸ்கீட் அணிகள் பிரிவில் அனந்த் ஜீத் சிங் நருகா, அங்கத் வீர் சிங் பஜ்வா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 355 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் வென்றது. சீனா(362) தங்கப் பதக்கமும், கத்தார் (359) வெள்ளிப் பதக்கம் பெற்றன.
மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் சிஃப்ட் கவுர் சாம்ரா, ஷி சவுக்சே, மனினி கவுசிக் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 462.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது. மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் இஷா சிங் 34 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் ருயி லியு 38 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், கொரியாவின் ஜின் யங் 29 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
கூடைப்பந்து: ஆடவருக்கான 3×3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி 21-12 என்ற கணக்கில் மக்காவோ அணியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
வாள்வீச்சு: வாள்வீச்சில் மகளிருக்கான எப்பி அணிகள் பிரிவில் இந்திய அணி கால் இறுதி சுற்றில் 25-45 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி அடைந்தது. ஆடவருக்கான பாயில் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 30-45 என்ற கணக்கில் சிங்கப்பூர் அணியிடம் தோல்வி அடைந்தது.
படகு போட்டி: ஆடவருக்கான படகு போட்டியில் டிங்கி ஐஎல்சிஏ-7 பிரிவில் இந்தியாவின் விஷ்ணு சரவணன் 34 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மகளிர் ஹாக்கி: மகளிர் ஹாக்கியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக்ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.
சங்கீதா குமாரி 3 கோல்களும், நவ்னீத் கவுர் 2 கோல்களும் உதிதா, சுசீலா சானு, தீபிகா,தீப் கிரேஸ், நேகா, சலிமா டிடி, மோனிகா, வந்தனா கட்டாரியா ஆகியோர் தலாஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் மலேசியாவுடன் நாளை மோதுகிறது.
ஸ்குவாஷ்: ஸ்குவாஷ் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. அனகத் சிங், ஜோஷ்னா, சின்னப்பா ஆகியோர் வெற்றியை பதிவு செய்தனர். இந்திய ஆடவர் அணி 3-0 என்ற கணக்கில் குவைத் அணியை வென்றது. அபய் சிங், சவுரவ் கோஷல், மகேஷ் மங்கோன்கர் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in