சந்திரமுகி 2 Review: என்ன கொடுமை வாசு சார் இது?

ரஜினி, ஜோதிகா நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம் ‘சந்திரமுகி’. திகில், காமெடி, பாடல்கள், மாஸ், ஆக்‌ஷன் என அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்று எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்திப்படுத்திய படம் அது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் விமர்சனம் இதோ…

காட்டன் மில் ஓனரான ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தில் தொடர்ந்து பல்வேறு துர்சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களுக்கு சொந்தமான காட்டன் மில்லில் தீ விபத்து நிகழ்கிறது. ஒரு விபத்தில் ரங்கநாயகியின் இளைய மகளால் (லட்சுமி மேனன்) நடக்க முடியாமல் போகிறது. அவரது மூத்த மகள் வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார். தங்கள் குலதெய்வத்தை ரங்கநாயகியின் குடும்பம் மறந்து போனதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக அவர்கள் குடும்ப சாமியார் (ராவ் ரமேஷ்) சொல்வதைக் கேட்டு சந்திரமுகி பங்களா இருக்கும் ஊருக்கு செல்கின்றனர்.

வேற்று மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்த மகளுக்கு பிறந்த குழந்தைகளையும் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சாமியார் கூறியதால், அந்தக் குழந்தைகளும் அவர்களது கார்டியனான பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) அந்த ஊருக்கு வருகின்றனர். சந்திரமுகி பங்களாவின் தற்போதைய ஓனர் முருகேசனிடம் (வடிவேலு) அந்த வீட்டை குத்தகைக்கு எடுத்து தங்கும் அவர்களை, தங்கள் குலதெய்வக் கோயிலில் பூஜை செய்ய விடாமல் தடுக்கிறார் ஒரிஜினல் சந்திரமுகி (கங்கனா). சந்திரமுகியை தடுத்து ரங்கநாயகியின் குடும்பம் குலதெய்வம் கோயிலில் பூஜை செய்ததா என்பதே மற்றவை.

படத்தின் தொடக்கத்தில் ராதிகாவின் குடும்பக் களேபரங்கள் முடிந்து லாரன்ஸின் அறிமுகக் காட்சி. அவர் பராமரிப்பில் இருக்கும் இரண்டு குழந்தைகளையும் யாரோ கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுகையில், பைக்கிலே பறந்து சென்று பஸ்ஸின் பின்பக்கத்தை உடைத்து உள்ளே சென்று, அடுத்த நொடி இரண்டு குழந்தைகளையும் அலேக்காக இரு கைகளில் பிடித்தபடியே பஸ்ஸின் முன்பக்கத்தை உடைத்துக் கொண்டு பைக்கோடு வெளியே பறந்து வருகிறார் லாரன்ஸ். படம் இனி எதை நோக்கிப் போகப் போகிறது என்பதை தெரிந்துகொண்டு உடம்பை இரும்பாக்கிக் கொண்டு அடுத்தடுத்த காட்சிகளுக்கு தயாரானோம்.

எந்தவித மெனக்கடலும் இல்லாமல் திரைக்கதையால் படம் சுவாரஸ்யம் கிஞ்சித்தும் இன்றி நகர்ந்து செல்கிறது. ஆரம்பத்தில் இரண்டு குழந்தைகளையும் வெறுத்து ஒதுக்கும் ராதிகா குடும்பத்தை ஒரே சீனில் வசனம் பேசியே திருத்தி விடுகிறார் ஹீரோ லாரன்ஸ். இதுபோன்ற ‘அவுட்டேட்டட்’ ஆன திராபையான காட்சிகள் மட்டுமே படம் முழுக்க நிறைந்துள்ளன. கதாபாத்திர வடிவமைப்புகளிலாவது கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. லட்சுமி மேனன் வீல் சேரில் அமர்ந்து வரும்போதே தெரிந்து விடுகிறது, அந்த கேரக்டருக்கு என்ன ஆகப் போகிறது என. திரை முழுக்க கதாபாத்திரங்கள் வதவத என நிறைந்திருக்கின்றனவே தவிர, அவை எதுவும் தெளிவாக எழுதப்படவே இல்லை.

இத்தனை ஆண்டுகளாக லாரன்ஸ் ரஜினியாக நின்றார். லாரன்ஸ் ரஜினியாக நடந்தார். லாரன்ஸ் ரஜினியாக தன்னை நினைத்துக் கொண்டார். இந்தப் படத்தில் லாரன்ஸ் ரஜினியாகவே மாறிவிட்டார். படத்தில் அறிமுகக் காட்சி தொடங்கி இறுதி வரை தன் ஒவ்வொரு அசைவிலும் ரஜினியை அப்படியே நகலெடுத்து நடித்து வைத்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பி.வாசு, லாரன்ஸிடமிருந்து ரஜினியை வெளியே எடுப்பதே கஷ்டமாக இருந்ததாகவும், ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின் சாயல் வந்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்ததாகவும் தெரிவித்தார். இவ்வளவு கவனமாக இருந்தே இப்படியென்றால், கவனிக்காமல் விட்டிருந்தால், நினைக்கவே நெஞ்சமெல்லாம் பதறுகிறது.

அடுத்து வடிவேலு. முந்தைய பாகத்தில் வந்த அதே முருகேசன் பாத்திரத்தில் வருகிறார். ஆனால், காமெடி என்ற பெயரில் வடிவேலுவும் லாரன்ஸும் செய்பவை சிரிப்புக்கு பதில் எரிச்சலை மட்டுமே வரவைக்கின்றன. அதிலும் முந்தைய பாகத்தில் “பேய் இருக்கா இல்லையா?” என்று வரும் கிளாசிக் காமெடியை வேறு மாதிரி எடுக்கிறேன் என்று ‘பேய்க்கு வயசாகுமா? ஆகாதா?’ என்று ஒரு நீ….ண்ட காட்சியை வைத்திருக்கிறார்கள். அரங்கம் முழுக்க மயான அமைதி நிலவுகிறது. படம் முழுக்க ஆங்கிலத்தை கொஞ்சம் கொனஷ்டையாக வடிவேலும் பேசுவதும் எடுபடவில்லை.

ராதிகா, ரவிமரியா, விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ருஷ்டி டாங்கே என ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தும் யாருக்கும் வேலையே இல்லை. மறைந்த நடிகர்கள் மனோ பாலா, ஆர்.எஸ்.சிவாஜியும் வீணடிக்கப்பட்டிருக்கின்றனர். முதல் பாகத்தில் உண்மையான சந்திரமுகி யாரென்று பார்வையாளர்களுக்கு தெரிவதை திசை திருப்பவாவது நயன்தாரா தேவைப்பட்டார். ஆனால், இதில் நாயகி மஹிமா நம்பியாருக்கு அந்த வேலையும் இல்லை. லட்சுமி மேனன் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

இரண்டாம் பாதியில் ஒரிஜினல் சந்திரமுகியாக வரும் கங்கனா தன்னுடைய நடனத்தாலும், நடிப்பாலும் ஈர்க்கிறார். ஆனாலும் க்ளைமாக்ஸுக்கு முன் வரும் பாடலில் ஜோதிகாவின் நடிப்பை நகலெடுக்க முயன்று தோற்கிறார். படத்தில் பரிதாபமான உயிரினம் அந்த பாம்புதான். முதல் பாகத்தில்தான் அந்த பாம்பை அம்போவென விட்டுவிட்டார்கள் என்றால், இந்தப் படத்திலும் அதற்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை. இனியும் கூட அந்த பாம்பு ‘சும்மா’ இருப்பதற்கு உதாரணமாக மீம்ஸ்களில் இடம்பெறப் போகிறது என்பதை நினைத்தாலே துக்கம் தொண்டையை அடைக்கிறது.

’சந்திரமுகி’ முதல் பாகத்தில் வரும் ‘தேவுடா தேவுடா’ பாடல் போல ஒரு பாடல் வேண்டுமா? அது இருக்கிறது. ‘அந்திந்தோம்’ பாடல் போல ஒன்று வேண்டுமா? அதுவும் இருக்கிறது. ‘கொஞ்ச நேரம்’ பாடல் வேண்டுமா? அதுவும் இருக்கிறது. ‘ராரா’ பாடல் வேண்டுமா? அதுவும் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிறது. ஆனால் எல்லாமே ரொம்ப சுமாராக இருக்கிறது. பின்னணி இசையால் படத்தை பல இடங்களில் கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்த முயல்கிறார் ஆஸ்கர் வாங்கிய எம்.எம்.கீரவாணி. பெரும் ஹிட்டடித்த ‘ராரா’ பாடல் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. ட்யூனை மாற்றி கொத்து பரோட்டோ போட்டிருக்கிறார்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. நடிகர்களின் உடை, அலங்காரம், பின்னணி என அனைத்தும் இந்தி மெகா சீரியல்களை ஞாபகமூட்டும் அளவுக்கு ‘பளிச்’சிடுகின்றன. தூங்கும்போது கூட படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மேக்கப்பில் மிளிர்கின்றனர்.

18 ஆண்டுகளுக்கு முன்பு வந்த முதல் பாகத்திலேயே கூட தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமில்லாத ‘ஸ்பிலிட் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ போன்ற மருத்துவ காரணங்களை சொல்லி ஜல்லியடித்திருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் மருந்துக்கு கூட புதுமை என்று ஒன்று இல்லவே இல்லை. கிட்டத்தட்ட முதல் பாகத்தை அப்படியே பட்டி டிங்கரிங் செய்து ‘வேட்டையன்’, ‘செங்கோட்டையன்’ என்று ஏதேதோ செய்து குதறி வைத்துள்ளனர்.

’மணிசித்ரத்தாழ்’, ‘ஆப்தமித்ரா’, ‘சந்திரமுகி’ என அனைத்து வடிவங்களிலும் வரவேற்பை பெற்ற ஒரு படைப்பின் பெயரை பயன்படுத்தி, நினைவில் வைக்கத்தகுந்த ஒரு அம்சம் கூட இல்லாத ஒரு படத்தை அதுவும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கியிருக்க வேண்டாம்.

இறுதியில் ‘விதியை யாராலும் வெல்ல முடியாது’ என்று ராவ் ரமேஷ் ஒரு வசனம் சொல்லும்போது இயக்குநர் பெயர் வருவது எதுவும் குறியீடா என்று தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக படத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் ‘சந்திரமுகி’யில் பிரபு சொல்லும் வசனத்தையே நாமும் சொல்லலாம். ‘என்ன கொடுமை வாசு சார் இது..?’

Chandramukhi 2 - Trailer (Tamil) | Ragava, Kangana Ranaut | P Vasu | MM Keeravaani | Subaskaran



Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *