ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கலப்பு இரட்டையர் டென்னிஸில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறது, இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ருத்துஜா போஸ்லே இணை. சீன தைபே இணையை வீழ்த்தி இந்த வெற்றியை இருவரும் பெற்றுள்ளனர்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்.30, சனிக்கிழமை) காலை முதலே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் மும்முரமாக பங்கேற்றுள்ளனர். தடகள பிரிவில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆல்ட்ரின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் சரப்ஜோத் மற்றும் திவ்யா வெள்ளி வென்றனர். கோல்ஃப் – மகளிர் ரவுண்ட் 3-ல் ஆதீதி முதலிடம் பிடித்தார். குத்துச்சண்டையில் பிரீத்தி, லவ்லினா மற்றும் நரேந்தர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
டென்னிஸ்: கலப்பு இரட்டையர் டென்னிஸில் சீன தைபேவின் ஷூவோ லியாங் மற்றும் ஹூவாங் இணையை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது ரோஹன் போபண்ணா மற்றும் ருத்துஜா போஸ்லே இணை. 2-1 என்ற செட் கணக்கில் இந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக 9 தங்கம் உள்பட 35 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in