ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (செப்.30, சனிக்கிழமை) காலை முதலே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் மும்முரமாக பங்கேற்றனர். நேற்றைய ஆட்டத்தில் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
ஹாக்கி: இதனிடையே ஆடவர் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 10-2 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
ஆசிய விளையாட்டு போட்டியில் குரூப் ஏ பிரிவு இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று லீக் ஆட்டத்தில் மோதின. இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி கோல் மழை பொழிந்தது. முதல் பாதியில் 4 -0 என்ற கணக்கில் கோல் மழை பொழிந்த இந்திய அணி, ஆட்டநேர முடிவில் பாகிஸ்தானை 10-2 என்ற கணக்கில் வென்று அபார வெற்றி பெற்றது. இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் 46 கோல்கள் அடித்திருக்கிறது இந்திய அணி.
ஸ்குவாஷ்: முன்னதாக, ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அனுபவம் வாய்ந்த ஸ்குவாஷ் வீரரான சவுரவ் கோஷல், பாகிஸ்தான் வீரரான முஹம்மது ஆசிமை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அபய் சிங் முதல் செட்டில் வெற்றி பெற்றாலும், அடுத்தடுத்த செட்களில் தோல்வியடைந்தார்.
இந்தியாவுக்கு தங்கம் கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கடைசி இரண்டு செட் போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுகொடுத்துள்ளார். இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற அபய் சிங் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தடகளத்தில் மேலும் இரண்டு பதக்கம்: இதேபோல் 10000 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இந்தியாவின் கார்த்திக் குமார் (28:15.38) வெள்ளிப்பதக்கம் வென்றார். அதேபோல் குல்வீர் சிங் (28:17.21) வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
இதன்மூலம் மொத்தமாக 10 தங்கம் உள்பட 36 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா உள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in