புதுடெல்லி: வியாழக்கிழமை தொடங்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களுக்கு ஐபிஎல் அனுபவம் பெரிதும் கைகொடுக்கும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் வான் டெர் டஸன் தெரிவித்துள்ளார். வரும் 7-ம் தேதி இலங்கை அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி, உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாட உள்ளது.
‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் வரும் 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. தற்போது 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி உள்ளன.
“நாங்கள் பேட்டிங் யூனிட்டாக இணைந்து கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருகிறோம். அதனால் ஒவ்வொருவரும் அடுத்தவரின் ஆட்டத்தை நன்கு அறிவோம். அதனால் போட்டியின் சூழலுக்கு ஏற்ப எங்கள் ஆட்டத்தை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது குறித்த புரிதலை பெற்றுள்ளோம். அதற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் எங்களுக்கு உதவியது.
அதேபோல இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் ஆடிய அனுபவம் எங்கள் அணி வீரர்களுக்கு பெரிதும் கைகொடுக்கும் என நம்புகிறோம். அது முக்கியமானதும் கூட. ஏனெனில், இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் நாங்கள் விளையாட உள்ளோம். இந்த இடங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான சூழலை கொண்டுள்ளது. டெல்லி, சென்னை, ஹைதராபாத் நகரங்களில் விளையாடிய அனுபவம் எங்கள் வீரர்களுக்கு உள்ளது. அது ஆடுகள சூழல், சிறந்த ஸ்கோர், பனிப்பொழிவு போன்றவற்றை கணித்து, ஆட்ட வியூகத்தை அமைக்க உதவும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளார் வான் டெர் டஸன். ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் சராசரி 56.78.
நன்றி
Publisher: www.hindutamil.in