Asian Games 2023 | கனவு வேலைக்காக 3 மணி நேரம் மட்டுமே உறக்கம் – பருல் சவுத்ரி தங்கம் வென்ற கதை!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் பருல் சவுத்ரி. தனது கனவு வேலைக்காக மூன்று மணி நேரம் மட்டுமே தூங்கிய கதையை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் வெள்ளி, மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் என இந்தியாவை கடந்த இரண்டு நாட்களாக தலைநிமிர செய்து வருகிறார் பருல் சவுத்ரி. நேற்று முன்தினம் இரவு 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் தங்கத்தை தவறவிட்ட பருல் அடுத்த 24 மணிநேரத்தில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தனது கனவான தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

1998 பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தான் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவில் இந்தியா வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்றிருந்தாலும் இதுவரை தங்கப் பதக்கம் என்பது நிறைவேறாத கனவாக இருந்தது. அந்த வரலாற்றை மாற்றி இப்பிரிவில் நேற்றிரவு இந்தியாவின் முதல் தங்கத்தை சாத்தியப்படுத்தினார் பருல் சவுத்ரி.

3000மீ ஓட்டப் பந்தயம் (8:57.19 விநாடி), 5000மீ ஓட்டப் பந்தயம் (15:10.35 விநாடி), மற்றும் 3000மீ ஸ்டீபிள்சேஸ் (9:15.31 விநாடி) ஆகியவற்றில் நேஷனல் ரெக்கார்ட் வைத்துள்ள பருல் சவுத்ரி, நேற்று 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 15:14.75 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். முன்னதாக, 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கடைசி இரண்டு சுற்றுகளுக்கு முன் மூன்றாவது இடம் இருந்தவர், தனது விடா முயற்சியால் முதலிடம் பிடித்தார்.

இந்த முயற்சிகள் அனைத்தும் தனது கனவு வேலைக்காக என மனம் திறந்துள்ளார் பருல். “எனது மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் டிஎஸ்பி (போலீஸ் சூப்பிரண்டு) பதவிபெற தங்கப் பதக்கம் தேவை. உ.பி காவல் துறையில், தங்கப் பதக்கம் வென்றால் மட்டுமே, டிஎஸ்பி மாதிரியான போஸ்டிங் கிடைக்கும். இந்த முயற்சி எனக்கு அந்த வேலையை பெற்றுத்தரும் என நம்புகிறேன்.

ஸ்டீபிள்சேஸில் வெள்ளி வென்ற இரவு நான் மிகவும் சோர்வாகவே இருந்தேன். அன்று இரண்டு மூன்று மணிநேரம் மட்டுமே தூங்கிவிட்டு மறுநாள் 5000மீ ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டேன். ஸ்டீபிள்சேஸில் தங்கம் வெல்ல முடியாததால் 5000மீ பிரிவில் தங்கத்தை வென்றாக வேண்டும் என எண்ணினேன். கடவுள் எனக்கு இரக்கம் காட்டினார். 5000மீ ஓட்டப் பந்தயத்தில் கடைசி 50மீ தூரத்தில் ஓடும்போதே அரசாங்கம் எனக்கு நல்ல வேலையைத் தரும் என நம்பினேன். டிஎஸ்பி வேலையை போல் எதுவும் இல்லை” என தனது கனவு வேலைக்காக மூன்று மணிநேரம் மட்டுமே தூங்கியதை உணர்ச்சிவசத்துடன் தெரிவித்துள்ளார் பருல்.

28 வயதாகும் பருல் சவுத்ரி உத்தரப் பிரதேசத்தின் மீரட் அருகே உள்ள இக்லௌடாவைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஒரு விவசாயி. கடந்த சில வருடங்களாக இந்தியாவின் ஸ்டீபிள்சேஸர்களில் முதலிடத்தை தக்கவைத்து வரும் பருல் தற்செயலாக தடகள விளையாட்டுக்குள் வந்தவர். பள்ளியில் அவர் படிக்கும்போது ஒருமுறை தந்தையின் ஆசைக்காக 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார். எந்தவித பயிற்சியும் இல்லாமல் வெறுங்காலுடன் ஓடி அந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர், அதன்பின் தடகளத்தையே தனது வாழ்க்கை பயணமாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *