ஹாங்சோ: ஹாங்சோவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 18-வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியாவின் சிறந்த பெர்ஃபாமென்ஸ் இதுவே. இதுவரை இல்லாத அளவுக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 18வது தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் 16 தங்கப் பதக்கங்களை வென்றதே இந்தியாவின் அதிகப்பட்ச சாதனையாக இருந்தது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த 35 கி.மீட்டர் கலப்பு அணி நடை ஓட்டத்தில் இந்தியாவின் ராம் பாபு, மஞ்சுராணி ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
ஈட்டி எறிதல்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். 88.88 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து நீரஜ் சோப்ரா தங்கத்தை தனதாக்கினார். இதேபோல் 87.54 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து இந்தியாவின் கிஷோர் ஜெனா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தடகளம்: மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் 2:03.75 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதேபோல், 5000 மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சேபில் வெள்ளி பதக்கம் வென்றார். அவர் 13:21.09 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். மேலும், மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனைகள் வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா மிஸ்ரா, பிராச்சி, சுபா வெங்கடேசன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
ஆடவருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வீரர்கள் அனஸ் முஹம்மது யாஹியா, அமோஜ் ஜேக்கப், முஹம்மது அஜ்மல் வாரியத்தோடி மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் 3:01.58 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றனர்.
வில்வித்தை: வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் ஜோதி-ஓஜஸ் ஜோடி கொரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
ஸ்குவாஷ்: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் அனாகத் சிங், அபய் சிங் ஜோடி 2-1 என்ற கணக்கில் மலேசிய அணியிடம் வீழ்ந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் ஜோடி 2-1 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சவுரவ் கோஷல் ஹாங்காங் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் இப்பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியானது.
குத்துச்சண்டையில் இரண்டு பதக்கம்: குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் சீனா தைபே வீராங்கனையை எதிர்கொண்ட இந்தியாவின் பர்வீன் ஹூடா தோல்வி அடைந்தார். இதனால் அவர் வெண்கலம் வென்றார். இதேபோல், குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்பில் களமிறங்கிய இந்தியாவின் லவ்லினா போர்கோஹெயின், சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் குத்து சண்டை பிரிவில் இதுவரை இந்தியா ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என ஐந்து பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
மல்யுத்தம்: ஆடவர் மல்யுத்த கிரேக்க-ரோமன் 87 கிலோ பிரிவில் இந்தியாவின் சுனில் குமார் 2-1 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் அட்டபெக் அசிஸ்பெகோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
பேட்மிண்டன்: பேட்மிண்டன் விளையாட்டில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, இந்தோனேசிய வீராங்கனையை 21-16, 21-16 என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், கஜகஸ்தான் வீரரை 21-12, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தோனேசியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
ஹாக்கி: ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய அணி 5-3 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நன்றி
Publisher: www.hindutamil.in