சென்னை: சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரத்தம்’ படத்தின் புதிய ப்ரோமோவில் வரும் ‘அமுதன் சினிமாடிக் யுனிவர்ஸ்’ கவனம் ஈர்த்துள்ளது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ரத்தம்’. கண்ணன் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படம் நாளை (அக். 6) திரையரங்குகளில் வெளியாகிறது.
இதற்கு முன்பு ‘தமிழ்ப்படம்’ ‘தமிழ்ப்படம் 2’ மூலம் தமிழ் சினிமா க்ளிஷேக்களை கிண்டலடித்த சி.எஸ்.அமுதன் இப்படத்தின் சீரியஸான கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். எனினும் இப்படத்துக்காக ப்ரோமோக்களில் தனது டிரேட்மார்க் பகடியை பயன்படுத்தி வருகிறார் சி.எஸ்.அமுதன்.
அதன்படி, தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ வீடியோவில், சமீபத்திய டிரெண்ட் ஆன ‘சினிமாடிக் யுனிவர்ஸை’ கலாய்த்துள்ளார் அமுதன். ‘தமிழ்ப்படம் 2’ வில்லனான சதீஷ் அதில் இடம்பெற்ற அதே கெட்-அப் உடன் இந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளார். அதில் அவரிடம் விசாரிக்கும் விஜய் ஆண்டனியிடன் “இது ‘அமுதன் சினிமாடிக் யுனிவர்ஸ்’ என்று பதிலளித்தவாறே ஆட்டோவில் ஏறிச் செல்கிறார் சதீஷ். அந்த ஆட்டோவை அதே படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்த சேத்தன் ஓட்டிச் செல்கிறார். இந்த காட்சி ’ரத்தம்’ படத்தில் இடம்பெற்றுள்ளதா அல்லது ப்ரோமோஷனுக்காக எடுக்கப்பட்ட காட்சியா என்று தெரியவில்லை.
நன்றி
Publisher: www.hindutamil.in