அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளன. தொடக்க நாளான இன்று முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் சீனியர் வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. நியூஸிலாந்து அணியில் டிம் சவுத்தி இடம்பெறவில்லை.
முதலில் பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரின் இரண்டாவது பந்தே சிக்ஸருடன் தொடங்கி வைத்தார் பேர்ஸ்டோவ். முதல் ஓவரில் மட்டும் இங்கிலாந்து 12 ரன்கள் குவித்தது. பேர்ஸ்டோவ் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினாலும், மறுமுனையில் ஆடிய மலான் நியூசிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். சற்றுநேரத்தில் பேர்ஸ்டோவ் 25 ரன்கள், ஹாரி புரூக் 25 ரன்கள், மொயின் அலி 11 ரன்கள் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் ஆட்டம் கண்டது.
இதன்பின் ஜோ ரூட் – பட்லர் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தார். இதனால் இங்கிலாந்து ஓரளவு மீண்டது. பட்லர் 43 ரன்களுக்கு நடையைக்கட்ட, ஜோ ரூட் 77 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. நியூசிலாந்து அணி தரப்பில் ஹென்றி, பிலிப்ஸ் 2 தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்துக்கு வில் யங் பூஜ்ஜியத்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், இதன்பின்னரே நியூசிலாந்து அணியின் ஆட்டம் சூடுபிடித்தது. டெவான் கான்வே உடன் இணைந்து இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவீந்திரா இங்கிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 10 ரன்கள் இருக்கும் போது இணைந்த இக்கூட்டணியை இறுதி வரை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். நாலாபுறமும் சிக்ஸர் பவுண்டரிகளை விளாசிய இருவரும் அடுத்தடுத்து சதம் கடந்தும் அசத்தினார்.
273 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்த இக்கூட்டணி 283 ரன்கள் இலக்கை 36.2 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றிபெற்றது. கான்வே 152 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 123 ரன்களும் குவித்தனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in