ஹாங்சோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா. 25 தங்கம், 35 வெள்ளி மற்றும் 40 வெண்கலம் என 100 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மட்டும் (அக்.7) காலை 8 மணி நேர நிலவரப்படி 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் வென்றது இந்தியா. மகளிர் கபடி, வில்வித்தை ஆடவர் மற்றும் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. மகளிர் தனிநபர் காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஜோதி சுரேகா. இதே பிரிவில் வெண்கலம் வென்றார் அதிதி. ஆடவர் தனிநபர் காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் ஓஜாஸ் தங்கமும், அபிஷேக் வெண்கலமும் வென்றனர்.
தொடர்ந்து மகளிர் கபடி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா. இந்தியா 26 புள்ளிகளை பெற்றது. சீன தைபே அணி 25 புள்ளிகளை எடுத்திருந்தது. அதன் மூலம் இந்தியா தங்கம் வென்றது. இது நடப்பு விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்றுள்ள 100-வது பதக்கம் ஆகும். பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் நீடித்து வருகிறது. இன்றைய தினம் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் மற்றும் ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா மேலும் 2 பதக்கம் வெல்லும்.
நன்றி
Publisher: www.hindutamil.in