சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 199 ரன்களை சேர்த்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்ய, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் 2வது ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் மார்ஷ் அவுட்டாக தடுமாற்றத்துடன் இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா. ஸ்டீவ் ஸ்மித், வார்னருடன் கைக்கோக்க ஆட்டம் சூடிபிடித்து. 16 ஓவர் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் பாதுகாத்த இந்த இணையை குல்தீப் யாதவ் பிரிக்க, வார்னர் 41 ரன்களில் அவுட்.
அடுத்து ஸ்மித் 46 ரன்களில் போல்டானார். மார்னஸ் லாபுசாக்னே நிலைத்து ஆடுவார் என நினைத்தபோது ஜடேஜாவின் பந்தில் வீழ்ந்தார். அதே ஓவரில் அலெக்ஸ் கேரி டக்அவுட்டானது ஆஸி., ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 119 ரன்களுடன் திணறியது.
கிளென் மேக்ஸ்வெல் 15 ரன்களிலும், கேமரூன் கிரீன் 8 ரன்களிலும், பேட் கம்மின்ஸ் 15 ரன்களிலும் அவுட்டாக இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா ரன்களை குவிக்க போராடியது. ஹர்திக் பாண்டியா பந்தில் ஆடம் ஜம்பா கொடுத்த கேட்சை கோலி பிடித்தார். இந்த போட்டியில் மட்டும் கோலி இரண்டு கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த ஃபீல்டர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். கடைசி ஓவரில் மிட்செல் ஸ்டார்க் 28 ரன்களில் விக்கெட்டாக, 199 ரன்களுக்குள் சுருண்டது ஆஸ்திரேலியா.
இந்திய அணி தரப்பில், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஹர்திக் பாண்டியா, முஹம்மது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நன்றி
Publisher: www.hindutamil.in