சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து அபார கூட்டணி அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர்.
சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருந்தார். குல்தீப் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர். அஸ்வின், சீராஜ் மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. ஷூப்மன் கில், காய்ச்சல் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இன்னிங்ஸை தொடங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன், ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஹேசில்வுட் வீசிய அடுத்த ஓவரில் கேப்டன் ரோகித் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் என இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.
2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது. அழுத்தம் மிகுந்த அந்த நேரத்தில் இணைந்த கோலி மற்றும் கே.எல்.ராகுல் என இருவரும் இணைந்து இன்னிங்ஸை நிதானமாக அணுகினர். ஸாம்பா, மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் என ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளித்து 165 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது. இருவரும் ஒற்றை ரன்களில் ஓட்டம் எடுத்து, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆஸ்திரேலியாவை இம்சித்தனர்.
விராட் கோலி, 116 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 6 பவுண்டரிகளை அவர் எடுத்திருந்தார். கே.எல்.ராகுல் 115 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசிய அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 41.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது இந்தியா. இந்திய அணி அடுத்தப் போட்டியில் வரும் புதன்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் விளையாடுகிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in