தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்துக்கு ‘பகவந்த் கேசரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகும் இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைத்துள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – ‘தங்கல்’ படத்தில் ஆமீர்கான் தனது மகள்களை வற்புறுத்தி மல்யுத்த போட்டிக்கு தயார் செய்வதைப்போல, பாலகிருஷ்ணா தனது மகளை ஆர்மியில் சேர்க்க கடுமையான பயிற்சிகளை கொடுக்கிறார். பொதுவாக கதையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு ‘மாஸ்’ மசாலாவாக உருவாகும் பாலகிருஷ்ணா படங்களில் நடுவே இப்படத்தில் கதை இருப்பதாக தெரிவது ஆறுதல்.
2.51 நிமிடங்கள் ஓடும் ட்ரெய்லரில் 1 நிமிடம் ஆக்ஷன் காட்சிகள் இல்லை. சொல்லப்போனால் பாலகிருஷ்ணாவின் மகளான ஸ்ரீலீலாவே முதல் 1 நிமிடம் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார். அடுத்து பாலகிருஷ்ணா ரசிகர்களுக்காகவே ‘பஞ்ச்’ ஆக்ஷன் காட்சிகள் அணிவகுக்கப்பட்டுள்ளன. “மகளுக்கு முன் தந்தை நிற்பது அனைத்து கடவுள்களும் ஒன்று சேர்ந்து நிற்பது போல” என்ற வசனம் படம் அப்பா – மகளுக்கானது என்பதை உறுதி செய்கிறது.
“சிங்கம் எந்த இடத்தில் நுழைந்தாலும் அது சிங்கம் தான்; ஒருபோதும் பூனையாகாது” என அவரின் பஞ்ச் அடுத்து எதிரிகள் முகத்தில் அவர் வைக்கும் பஞ்ச் என பயணிக்கும் ட்ரெய்லரின் இறுதியில் சிறைக்கைதியாக காட்டப்படுகிறார் பாலகிருஷ்ணா. அப்படியென்றால் நிச்சயம் அது அவருக்கான ஃப்ளாஷ்பேக்காக இருக்க வாய்ப்புள்ளது. தந்தை – மகள் சென்டிமென்ட் இடம்பெறும் என்பதால் கதை, சென்டிமென்ட், ஆக்ஷன், மாஸ் என வெகுஜன சினிமாவாக ‘பகவந்த் கேசரி’ உருவாகியிருப்பது ட்ரெய்லர் உணர்த்துகிறது. குறிப்பாக படம் விஜய்யின் ‘லியோ’வுடன் 19-ம் தேதி மோதுகிறது. ட்ரெய்லர் வீடியோ:
நன்றி
Publisher: www.hindutamil.in