ஹைதராபாத்: நெதர்லாந்து அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து அணி.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் நெதர்லாந்து அணி மோதியது. ஹைதராபாத் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய கான்வே – வில் யங் நியூஸிலாந்துக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் 3 ஓவர்களை மெய்டனாக வீசி நெதர்லாந்து பவுலர்கள் ஷாக் கொடுத்து ஆட்டத்தை தொடங்கினர். கான்வே – வில் யங் கூட்டணி முதலில் தடுமாறினாலும் பின்னர் பவுண்டரிகளாக விளாசி ரன்களை சேகரித்தனர்.
கான்வே 32 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா – வில் யங் கூட்டணி அமைத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரை சதம் கடந்துடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 144 ரன்கள் இருந்த போது இவர்கள் ஜோடி பிரிந்தது. யங் 70 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, ரச்சின் ரவீந்திரா 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதிகட்டத்தில் மிட்செல் 48, டாம் லாதம் 53, சான்ட்னர் 36 ரன்கள் குவிக்க, நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
323 ரன்கள் இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்களில் கொலின் அக்கர்மேனை தவிர மற்றவர்கள் சிறப்பாக செயல்பட தவறினர். கொலின் அக்கர்மேன் 69 ரன்களும், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 30 ரன்களும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 29 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. மிட்செல் சான்ட்னர் நெதர்லாந்து வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தி, மொத்தம் ஐந்து விக்கெட்களை சாய்த்தார். இதனால் 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்த நெதர்லாந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அபார வெற்றிபெற்றது. அந்த அணி தரப்பில் மிட்செல் சான்ட்னர் 5 விக்கெட், மேட் ஹென்றி 3 விக்கெட் வீழ்த்தினர்.
நன்றி
Publisher: www.hindutamil.in