மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படமான ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிஷோர், ரோனி டேவிட் ராஜ், ஷபரீஷ் வர்மா, அஜீஸ், ஷைன் டாம் சாக்கோ, சன்னி வெயின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ‘கும்பளாங்கி நைட்ஸ்’ புகழ் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
மம்மூட்டி தயாரித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இப்படம் வெளியாகி 15 நாட்களில் உலக அளவில் ரூ.70 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் மட்டும் படம் ரூ.35 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
மம்மூட்டி நடிப்பில் அடுத்து ஜீயோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி – ஜோதிகா நடித்துள்ள ‘காதல் தி கோர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.hindutamil.in