சென்னை: ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தில் ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணன் இணைந்துள்ளார்.
நடிகர் விஷாலின் 34-வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். இன்னும் பெயிரிடப்படாத இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இதற்கு ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். தற்போது இப்படத்தின் மூலம் 3வது முறையாக அவருடன் இணைகிறார். இது, வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தூத்துக்குடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற குமாரசக்கனாபுரம் கிராமத்துக்கு நடிகர் விஷால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தின் ஸ்டண்ட் இயக்குநராக சூப்பர் சுப்புராயன் பணியாற்றி வரும் நிலையில், கிளைமாக்ஸ் காட்சிக்காக கனல் கண்ணன் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கனல் கண்ணன் இதற்கு முன் விஷாலுடன் ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘சத்யம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.hindutamil.in