தேனி: மஹாளய அமாவாசையை முன்னிட்டு தேனி வீரபாண்டி முல்லை பெரியாற்றின் கரையில் ஏராளமானோர் வந்திருந்து தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் வளர்பிறை, தேய்பிறைகளை கணக்கிட்டு 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் அமாவாசை திதியின்போது முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபடுவது வழக்கம். புரட்டாசியில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மற்ற அமாவாசைகளை விட இது சிறப்பு பெற்ற திதி என்பது ஐதீகம்.
இந்நாளில் தாய், தந்தைவழி முன்னோர்களுக்கு மட்டுமல்லாது நண்பர்கள், ஆசிரியர்கள் என்று ரத்த உறவு கடந்த பழக்கவழக்கத்தில் இருந்தவர்களுக்கும் இந்நாளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதன்படி, இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு தேனி வீரபாண்டி முல்லை பெரியாற்றின் கரையில் ஏராளமானோர் வந்திருந்து தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இதற்காக பூசணி,வாழைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள், முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையிலிட்டனர். பின்பு வழிபாடுகள் செய்து அரிசி பிண்டத்துடன் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் அளித்ததுடன், கால்நடைகளுக்கு அகத்திகீரை உள்ளிட்டவற்றையும் வழங்கினர்.
ஆற்றின் கரையில் அமைந்த வழிபாட்டுத்தலம் என்பதால் வீரபாண்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு இவ்வழிபாட்டில் ஈடுபட்டனர். இதே போல் சுருளிஅருவி, பெரியகுளம் பாலசுப்பிரமணிசுவாமி கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சிஅம்மன் கோயில் பகுதிகளிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in