அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
1.30 லட்சம் ரசிகர்கள் திரண்டிருந்த அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியஅணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு பதிலாக ஷுப்மன் கில் களமிறங்கினார். பாகிஸ்தான் அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக், இமாம் உல் ஹக் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.
8 ஓவர்களில் 41 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் அப்துல்லா ஷஃபிக்கை (20), எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்து திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார் மொகமது சிராஜ். நிதானமாக விளையாடிய இமாம் உல் ஹக்கை 36 ரன்களில் வெளியேற்றினார் ஹர்திக் பாண்டியா. இதன்பின்னர் கேப்டன் பாபர் அஸமுடன் இணைந்த மொகமது ரிஸ்வான் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இந்த ஜோடி ரன் ரேட் விகிதத்தை 5 என்ற அளவில் கொண்டு சென்றது. 29 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 150 ரன்கள் சேர்த்து வலுவாகவே இருந்தது. பாபர் அஸம் 57 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது 29-வது அரை சதத்தை அடித்தார். 30-வது ஓவரை வீசிய மொகமது சிராஜ், பாபர் அஸமை (50) போல்டாக்கினார். இது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 3வது விக்கெட்டுக்கு மொகமது ரிஸ்வானுடன் இணைந்து பாபர் அஸம் 82 ரன்கள் சேர்த்தார்.
33-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் இரு விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். சவுத் ஷகீலை 6 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார் குல்தீவ் யாதவ். இதே ஓவரின் கடைசி பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாட முயன்ற இப்திகார் அகமது (4) போல்டானார். இதன் பின்னர் பாகிஸ்தான் அணி சரிவை நோக்கி பயணித்தது.
ஜஸ்பிரீத் பும்ரா தனது அற்புதமான ஆஃப் – கட்டரால் மொகமது ரிஸ்வானை போல்டாக்கினார். ரிஸ்வான் 69 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்தார். ஷதப் கானும் (2), பும்ராவின் வேகத்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதன் பின்னர் மொகமது நவாஸ் 4 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தை மிட் ஆன் திசையில் தூக்கி அடிக்க பும்ராவிடம் கேட்ச் ஆனது. கடைசி இரு விக்கெட்களான ஹசன் அலி (12), ஹரிஸ் ரவூஃப் (2) ஆகியோரை ரவீந்திர ஜடேஜா வெளியேற்ற 42.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணி தனது கடைசி 8 விக்கெட்களை 13 ஓவர்கள் இடைவெளியில் 36 ரன்களுக்கு கொத்தாக தாரை வார்த்தது.
192 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தனது 53-வது அரை சதத்தை கடந்த ரோஹித் சர்மா 63 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசியநிலையில் ஷாகீன் ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 16, விராட் கோலி 16 ரன்களில் வெளியேறினர். தனது 15-வது அரை சதம் அடித்த ஸ்ரேயஸ் ஐயர் 63 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், கே.எல்.ராகுல் 29 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும், 2-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் இந்திய அணி வென்றிருந்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் தொடர்ச்சியான 8-வது வெற்றியாகவும் இது அமைந்தது. இதன் மூலம் முதன்முறையாக இந்திய அணியை வெல்ல வேண்டும் என்ற பாகிஸ்தான் அணியின் கனவு இம்முறையும் கைகூடாமல் போனது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் 1.821 நெட் ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. நியூஸிலாந்து அணி 6 புள்ளிகளுடன் (நெட் ரன் ரேட் 1.604) 2-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள பாகிஸ்தான் அணிக்கு இந்தத் தொடரில் இது முதல் தோல்வியாக அமைந்தது. 4 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி பட்டியலில் 4-வது
இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ஜஸ்பிரீத் பும்ரா தேர்வானார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் சிறப்பாக பயன்படுத்தியது வெற்றிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்தது.
முதல் அரை சதம்: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் இந்திய அணிக்கு எதிராக முதன்முறையாக அரை சதம் அடித்துள்ளார். இதற்கு முன்னர் அவர், விளையாடிய 6 ஆட்டங்களிலும் அரை சதத்தை எட்டியது இல்லை.
சிக்ஸரில் 300…: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹித் சர்மா 6 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 300 சிக்ஸர்களுக்கு மேல் விளாசிய 3-வது வீரர் என்ற பெருமையை அவர், பெற்றார். 246 இன்னிங்ஸில் 303 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார் ரோஹித் சர்மா. இந்த வகை சாதனையில் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், மேற்கு இந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் 331 சிக்ஸர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
அதிக ரன்கள் குவித்தவர்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா 1,195 ரன்களுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்த வகையிலான சாதனையில் சச்சின் டெண்டுல்கர் 2,278 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார். விராட் கோலி 1,186 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
தோல்வி ஏன்?: தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் கூறும்போது, “ஆட்டத்தை நாங்கள் சிறப்பாகவே தொடங்கினோம். எனக்கும் இமாம் உல் ஹக்குக்கும் இடையே சிறந்த பார்ட்னர்ஷிப் இருந்தது. இதன் பின்னர் நானும், ரிஸ்வானும் இயல்பாக விளையாட விரும்பினோம். திடீரென சரிவை சந்தித்தோம். நாங்கள் தொடங்கிய விதத்தில் 280 முதல் 290 ரன்கள் என்ற இலக்கை கொடுக்க நினைத்தோம். பந்து வீச்சிலும் தொடக்கத்தில் எங்கள் தரநிலைக்கு தகுந்தவாறு செயல்படவில்லை. ரோஹித் சர்மா அற்புதமாக விளையாடினார்” என்றார்.
என்ன சொல்கிறார் ரோஹித்?: வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “பந்து வீச்சாளர்கள் தான் எங்களுக்கு ஆட்டத்தை அமைத்துக் கொடுத்தனர். அது 190 ரன்கள் சேர்க்கக்கூடிய ஆடுகளம் என்று நான் நினைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 280 ரன்களை சேர்க்கக்கூடும் என எதிர்பார்த்தோம். ஆனால் பந்து வீச்சாளர்கள் காட்டிய மன உறுதிதான் இதற்கு காரணம். மிகவும் உற்சாகமடையவும் விரும்பவில்லை, மிகவும் தாழ்வாக இருக்கவும் விரும்பவில்லை. சமநிலையுடன் இருக்க விரும்புகிறேன். அமைதியாக இருந்து முன்னேறிச் செல்ல வேண்டும். நாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு அணியும் தரமானவை. போட்டியின் தினத்தில் நன்றாக விளையாட வேண்டும், அதைத்தான் நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றார்.
நன்றி
Publisher: www.hindutamil.in