விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமுண்டீச்சரம் ஸ்ரீ சிவலோகநாதர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சாமி தரிசனம் செய்ததுடன் கோயிலின் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள திருமுண்டீச்சரம் கிராமத்தில் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற செல்வாம்பிகை உடனமர் ஸ்ரீ சிவலோகநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் அப்பரால் பாடல் பெற்ற தலமாகும். இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.
இக்கோயில் கி.பி.943ல் வெள்ளாங்குமரன் மன்னரால் கருங்கலில் கட்டப்பட்டது. வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப்பை (பொக்களம்) தந்ததை குறிப்பிடும் வகையில் கல்வெட்டில் பொக்களம் கொடுத்த நாயனார் என்றும், ஆற்றுத்தளி பெருமான் ஆற்றுத்தளி மகாதேவர் என்றும் இடம்பெற்றுள்ளது. இந்த கோயிலின் தொன்மையை விளக்கும் செய்திகள் கல்வெட்டுகளில் உள்ளன.
தொன்மைக்கும் பழமைக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்ற இக்கோயிலை காண்பதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று வருகை தந்தார். அதன்படி, கோயிலில் சிவலோலகநாதர் மற்றும் செல்வாம்பிகை அம்மனை தரிசனம் செய்துவிட்டு கல்வெட்டுகளை ஆய்வு செய்தார் ஆளுநர் ரவி. தரிசன ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினரும் செய்தனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு கோயிலுக்குள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நன்றி
Publisher: www.hindutamil.in