பழைய பாடல்களுக்கென்று தனி மவுசு இருப்பதை உணர்ந்த இன்றைய இயக்குநர்கள் அதனை தற்போதைய படங்களுடன் சேர்த்து காட்சிகளை அதற்கு தகுந்தவாறு பின்னி புது ரசனையை உருவாக்க முனைகிறார்கள். அப்படியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் குறித்து பார்ப்போம்.
கடந்த 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள காஃபி ஷாப் சண்டைக்காட்சி ரசிக்ரகளை ஈர்த்தது. அதிலும் அந்த சண்டைக்காட்சிக்கு முன்னதாக வரும் ‘கரு கரு கருப்பாயி’ பாடலில் விஜய்யின் ஸ்டெப் அவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
இப்பாடல் பிரபுதேவா நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘ஏழையின் சிரிப்பில்’ படத்தில் இடம்பெற்றிருந்தது. அதேபோல 1995-ல் பிரபு நடிப்பில் வெளியான ‘பசும்பொன்’ படத்தில் வரும் ‘தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணெய்க்கும் சண்டையே வந்ததில்ல’ பாடலையும் லோகேஷ்கனகராஜ் ‘லியோ’வில் பயன்படுத்தியிருந்தார். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் இந்த பழைய பாடல்கள் ட்ரெண்டை முன்னணி நடிகர்களின் படங்களில் காண முடிகிறது.
முன்னதாக ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் 1999-ம் ஆண்டு வெளியான ‘Taal’ படத்தின் ‘தால் சே தால் மிலா’ (Taal Se Taal) பாடலை பயன்படுத்தியிருந்தார்கள். இதற்கான நடனம் ரசிகர்களுக்கு புது வைப் கொடுத்தது. அந்த பகுதியை மட்டும் கட் செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். அதேபோல சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் ‘எட்டுபட்டி ராசா’வில் இடம்பெற்ற ‘பஞ்சு மிட்டாய் சேல கட்டி’ பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தனர்.
அந்த காட்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது. இதே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘பகீரா’ படத்தில் ‘பட்டகோட்ட அம்மாளு’ பாட்டை பிரபுதேவாவின் நடனத்துடன் மிரட்டியிருந்தார். ரஜினியின் ‘ரங்கா’ படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றியிருந்தது. ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் கூட, ட்ரெயின் காட்சியில் ‘பாட்டு பாடவா’ பாடலில் ஷாருக்கானின் சிறிய நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இப்படியாக பழைய பாடல்களைக்கொண்டு புதிய படங்களில் நாயகர்கள், மற்ற கதாபாத்திரங்களின் நடனங்களுக்கு பயன்படுத்தி வரும் ட்ரெண்ட் ‘ஜெயிலர்’, ‘ஜவான்’, ‘லியோ’ படங்களில் கச்சிதமாக பொருந்தியிருந்தது. சரி லோகேஷ் யூனிவர்ஸ் அதாவதி ‘எல்சியூ’ படங்களிலிருந்தே லோகேஷ் கனகராஜ் இதனை பயன்படுத்தி வந்திருப்பதை அறியமுடியும்.
கைதி: முன்னதாக லோக்கி இயக்கிய ‘கைதி’ திரைப்படத்தில் மிக சீரியஸான காட்சி ஒன்றில் 1999-ஆம் ஆண்டு வெளியான ‘என் சுவாசக் காற்றே’ படத்தில் இடம்பெற்ற ஜும்பலக்கா ஜும்பலக்கா பாடல் இடம்பெற்றிருந்தது. அதேபோல வில்லனான அர்ஜுன் தாஸ் டெரராக வந்து நிற்கும் காட்சியில் ‘ஆசை அதிகம் வெச்சு’ பாடலை சேர்த்து படத்தின் டோனை மாற்றியிருந்தார் இயக்குநர்.
விக்ரம்: ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் போருக்கு தயாராவதுபோல் துப்பாக்கிகளை வைத்து நிற்க,அந்த சீனில் 1995-இல் வெளியான ‘அசுரன்’ படத்தில் லோகேஷ் கனகராஜின் ஃபேவரைட்டான மன்சூர் அலிகான் ஆடிய பாடலான ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாடலை பயன்படுத்தி ரசிக்க வைத்திருப்பார். இந்த ட்ரெண்ட் தமிழ் சினிமாவின் அடுத்தடுத்த படங்களிலும் இடம்பெறும் என தெரிகிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in